சிங்கப்பூரில் ஓட்டிச் செல்லப்படும் சைக்கிள்களில் பிரேக் கட்டாயமாக இருக்கவேண்டுமா, வேண்டாமா என்பதை ஒரு குழு முடிவு செய்யும்.
சைக்கிள் ஓட்டும்போது கால் மிதிக்கட்டைகளும் சேர்ந்து சுற்றுகின்ற, கை பிரேக் இல்லாத சைக்கிள் ஒன்றை ஓட்டிச் சென்ற ஒரு சிறுமி மரணம் அடைந்துவிட்ட சம்பவத்தை அடுத்து தனிநபர் நடமாட்ட சாதன ஆலோசனைக் குழு, சைக்கிள் பிரேக் பற்றி ஆராயும்.
சிறுமி ஓட்டிச் சென்றதைப் போன்ற சைக்கிள்களில் கை பிரேக் இருக்காது. சைக்கிளை நிறுத்த வேண்டுமானால் மிதிப்பதை நிறுத்த வேண்டும்.
போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், இந்த விவரங்களைத் தெரிவித்தார். இதர நாடுகள் பலவும் இத்தகைய கை பிரேக் இல்லாத சைக்கிள்களை தடை செய்துள்ளன.
இதர நாடுகளின் நிலவரங்களை ஆராய்ந்து, பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, பலரிடத்தில் இருந்தும் கருத்துகள் திரட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். பாசிர் ரிஸ் பகுதியில் இருக்கும் பல அடுக்கு கார் பேட்டை ஒன்றில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி இத்தகைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்த 13 வயது சிறுமி உலோகத் தடுப்பு ஒன்றில் மோதி கீழே விழுந்து இறந்துவிட்டார்.
இதுபோன்ற உயிருடற் சேதத்தை விரும்பவில்லை என்று தெரிவித்த திரு பே, குழு நடத்தும் பரிசீலனை சரிசம அணுகுமுறையுடன் இடம்பெறும் என்றார். அந்தப் பரிசீலனை இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

