ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வாரயிறுதி நாட்களில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு அக்கடைத்தொகுதியில் செயல்படும் கடைக்காரர்கள் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து தங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் புலம்புகின்றனர்.
இன்றைய நிலவரப்படி, கட்டுப்பாடுகளைத் தளர்த்த அதிகாரிகளை வலியுறுத்தும் குறைந்தது இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கட்டுப்பாடுகளை நீக்க இப்போதைக்கு எண்ணம் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தனிநபர் இடைவெளி நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய லக்கி பிளாசா நிர்வாகம் பலமுறை தவறிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் வாரயிறுதி நாட்களில் லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா ஆகிய இரு கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர் தங்கள் அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டை ஆகியவற்றில் உள்ள கடைசி இலக்கத்தைப் பொறுத்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் தெரிவித்து இருந்தன. அங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவை விளக்கமளித்து இருந்தன.
முன்னதாக பாதுகாப்பு நடைமுறைகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதாலேயே வாரயிறுதி நாட்களில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் விவரித்தது.
தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யத் தவறிய லக்கி பிளாசாவில் ஏழு கடைகளுக்கும் அக்கடைத்தொகுதி நிர்வாகத்திற்கும் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக பயணத்துறைக் கழகத்தின் சில்லறை விற்பனை, உணவருந்துதல் பிரிவு இயக்குநர் ரனிதா சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
"சமூக ஒன்றுகூடல் தொடர்பிலான வழிகாட்டி நெறிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 26 பேருக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டது," என்று குறிப்பிட்ட அவர், ஆர்ச்சர்ட் சாலையில் இயங்கும் வேறெந்த கடைத்தொகுதியிலும் இத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதில்லை என்றார்.

