ஐநாவின் சிங்கப்பூர் சமரச உடன்பாடு நடப்புக்கு வந்தது

ஐநாவின் சிங்கப்பூர் சமரச உடன்பாடு நடப்புக்கு வந்தது

2 mins read
c1b01b62-7de4-45c5-afaa-9ecf8ee217f0
-

நிறுவனங்கள், எல்லை கடந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவவும் அனைத்துலக வர்த்தகத்துக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உருவாக்கப்பட்டு இருக்கும் ஓர் அனைத்துலக உடன்பாடு இன்று முதல் நடப்புக்கு வந்தது.

அந்த உடன்பாட்டிற்கு 'சிங்கப்பூர் சமரச உடன்பாடு' என்று பெயர். ஐநா நிறுவனம் அதை உருவாக்கி சிங்கப்பூரின் பெயரைச் சூட்டி உள்ளது. சட்ட அமைச்சும் ஐநா அமைப்பும் இந்த விவரங்களை கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

உலகம் முழுவதும் செயல்படும் நிறுவனங்கள், இந்தச் சமரச உடன்பாட்டை நடப்புக்குக் கொண்டு வந்துள்ள நாடுகளின் நீதிமன்றங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.

இதன் மூலம் எல்லை கடந்த சச்சரவுகளுக்குச் சமரச அணுகுமுறையில் தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதைச் செய்வதே இந்த உடன்பாட்டின் நோக்கம்.

சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், அந்த உடன்பாட்டில் முதன்முதலாகக் கையெழுத்திடும் நாடு என்ற முறையில் சிங்கப்பூரை பிரதிநிதித்து அதில் கையெழுத்திட்டார்.

உடன்பாடு நடப்புக்கு வருவது குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் என்று அவர் வர்ணித்தார்.

அனைத்துலக சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் வழிகளை அமலாக்குவதற்கான ஏற்பாட்டை இந்த உடன்பாடு மேலும் பலப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எல்லை கடந்த வர்த்தக விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் நிறுவனங்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த உடன்பாடு உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

முடிவில் இது அனைத்துலக வர்த்தகத்திற்கும் தொழில்களுக்கும் நல்ல வசதியை ஏற்படுத்தித் தரும்.

'ஐநா அனைத்துலக சமரச இணக்க உடன்பாடு' என்றும் குறிப்பிடப்படும் இதில் இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 53 நாடுகள் கையெழுத்திட்டு இருந்தன.