கடிதப் பெட்டிகளில் குறும்புத் தனம் செய்து அவற்றில் இருந்து திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 18 வயது இளையர்கள் ஐந்து பேரை போலிஸ் கைது செய்துள்ளது.
ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் சுற்றுக்காவல் மேற்கொண்டு இருந்தனர்.
சுவா சூ காங் ஸ்திரீட் 53ல் இருக்கும் புளோக் 707ன் வெற்றுத் தளத்தில் ஐந்து பதின்ம வயதினர் சந்தேகம் ஏற்படும் வகையில் காணப்பட்டனர்.
அவர்களைப் பரிசோதித்தபோது அவர்களிடம் பார்சல் பொட்டலங்கள் பல இருந்தன.
அவை அஞ்சல் பெட்டிகளில் இருந்து திருடப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிறகு அதிகாரிகள் அந்த ஐவரையும் கைது செய்தனர். அவர்கள் சுவா சூ காங் நார்த் 5 மற்றும் சுவா சூ காங் ஸ்திரீட் 53 ஆகிய பகுதிகளில் இருக்கும் ஆறு அஞ்சல் பெட்டிகளைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.
அஞ்சல் பெட்டிகள் சேதம் பற்றிய விவரம் நகர மன்ற ஊழியர் ஒருவர் மூலம் தெரியவந்ததாக சிங்போஸ்ட் குறிப்பிட்டது. புலன் விசாரணை தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட பெட்டிகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சிங்போஸ்ட் குறிப்பிட்டது.

