$3 மில்லியன் மோசடிகள்: 261 பேரிடம் விசாரணை

1 mins read
99d90779-8a93-40c7-b9c0-9661ac87c357
-

போலிசார், 544 மோசடி விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ள 261 பேரை விசாரித்து வருகிறார்கள். அந்த மோசடிகளுக்கு இலக்கான அப்பாவிகள் மொத்தம் $3 மில்லியனுக்கும் அதிக தொகையைப் பறிகொடுத்து உள்ளனர்.

இணையக் காதல், இணைய வர்த்தகம், கடன் மோசடிகள் முதலானவையே அந்தத் தில்லுமுல்லுகளில் அதிகம். விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகப்பேர்வழி களில் 163 பேர் ஆடவர்கள், 98 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 15 முதல் 83 வரை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு தரை போலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஆகஸ்ட் 29க்கும் செப்டம்பர் 11க்கும் இடையில் எடுத்த இரண்டு வார கால நடவடிக்கைகளை அடுத்து புலன் விசாரணைகள் நடக்கின்றன. அவற்றில் அந்த 261 பேரும் உதவி வருகிறார்கள். ஏமாற்றியது, கள்ளப் பண விவகாரம் போன்றவை தொடர்பில் விசாரணை நடக்கிறது.

ஏமாற்றியது தொடர்பில் யாரேனும் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

கள்ளப்பண விவகாரத்தைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் வரைப்பட்ட சிறையும் $500,000 வரை அபராதமும் விதிக்கச் சட்டத்தில் இடம் உண்டு.

மோசடிகளைத் தவிர்க்கும் ஆலோசனைகளைப் பெற 1800-255-0000 என்ற நேரடி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது https://www.scamalert.sg/ என்ற முகவரியில் அவற்றைப் பெறலாம்.