ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வாரயிறுதி நாட்களில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு அக்கடைத்தொகுதியில் செயல்படும் கடைக்காரர்கள் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்துள்ளனர். கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து தங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் புலம்புகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, கட்டுப்பாடுகளைத் தளர்த்த அதிகாரிகளை வலியுறுத்தும் குறைந்தது இரு மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனால், கட்டுப்பாடுகளை நீக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தனிநபர் இடைவெளி நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய லக்கி பிளாசா நிர்வாகம் பலமுறை தவறிவிட்டதாக அவர்கள் கூறினர்.
கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் வாரயிறுதி நாட்களில் லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா ஆகிய இரு கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர் தங்கள் அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டை ஆகியவற்றில் உள்ள கடைசி இலக்கத்தைப் பொறுத்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் தெரிவித்து இருந்தன. அங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவை விளக்கமளித்து இருந்தன.
தங்கள் அடையாள அட்டையின் கடைசி இலக்கமும் தேதியும் ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் கடைத்தொகுதிக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. அதேபோல், அடையாள அட்டையின் கடைசி இலக்கமும் தேதியும் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் கடைத்தொகுதிக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படுவர்.
எனினும், இந்தக் கட்டுப்பாடுகளின் காரணமாக லக்கி பிளாசாவில் வாரயிறுதி நாட்களில் வியாபாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 'குளுனிதாய் ரெஸ்டராண்ட் & பார்' எனும் உணவகத்தை நடத்தி வரும் திரு ஹோ சீ இயூ, 45, வாரயிறுதி நாட்களில் வருவாய் 95 விழுக்காடு சரிந்துள்ளதாக கூறினார்.
"சமையலுக்குத் தேவையான பொருட்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் $450 செலவாகிறது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் $400 மட்டும் வியாபாரம் நடந்தது," என்று புலம்பும் திரு ஹோ, $7,000 மாத வாடகையைச் சமாளிப்பதில் தாம் மிகவும் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டார்.
காலணி கடை விற்பனையாளர் ஜான் செங்குடன் இணைந்து மனு ஒன்றைத் தயாரிக்கும் பணியில் அவர் இறங்கினார். நேற்று முன்தினம் பிற்பகல் நிலவரப்படி, லக்கி பிளாசாவைச் சேர்ந்த 100 கடைக்காரர்கள் அதில் கையெழுத்திட்டு உள்ளனர்.
பிலிப்பீன்சிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகு பராமரிப்பு மற்றும் உணவுப் பொருட்களை விற்கும் திருமதி ஜெனிஃபர் எடலின், 18 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் $300க்கு சரிந்ததாக கூறினார். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக $1,200 முதல் $2,000 வரை வியாபாரம் நடக்கும் என்று அவர் சொன்னார்.
கடந்த புதன்கிழமை இணையத்தில் அவர் தொடங்கிய மனு ஒன்றில் நேற்று காலை நிலவரப்படி 165 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
எனினும், முன்னதாக பாதுகாப்பு நடைமுறைகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதாலேயே வாரயிறுதி நாட்களில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் விவரித்தது.
தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யத் தவறிய லக்கி பிளாசாவில் ஏழு கடைகளுக்கும் அக்கடைத்தொகுதி நிர்வாகத்திற்கும் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக பயணத்துறைக் கழகத்தின் சில்லறை விற்பனை, உணவருந்துதல் பிரிவு இயக்குநர் ரனிதா சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
"சமூக ஒன்றுகூடல் தொடர்பிலான வழிகாட்டி நெறிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 26 பேருக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டது," என்று குறிப்பிட்ட அவர், ஆர்ச்சர்ட் சாலையில் இயங்கும் வேறெந்த கடைத்தொகுதியிலும் இத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதில்லை என்றார்.

