மார்சிலிங் குடியிருப்பாளர்கள் வேலை தேட உதவ, சுமார் 10 தொண்டூழியர்கள் நடத்தும் 'மார்சிலிங் கரியர்ஸ்' எனும் ஆதரவுக் கட்டமைப்பின்கீழ் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
"குடியிருப்பாளர்களால், குடியிருப்பாளர்களுக்காக" என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் அடுத்த சில மாதங்களுக்கு மெய்நிகர் வேலை கண்காட்சிகள், நேர்முகத் தேர்வுகள் போன்ற அம்சங்கள் இடம்பெறும்.
வேலை வாய்ப்புகளை வழங்க அடித்தளத் தலைவர்கள், அரசாங்க அமைப்புகள், வர்த்தகங்கள் ஆகிய பல்வேறு தரப்பினருடன் சேர்ந்து இத்திட்டத்தின் தொண்டூழியர்கள் பணியாற்றுவர்.
உட்லண்ட்சில் உள்ள காஸ்வே பாயிண்ட் கடைத்தொகுதியில் நேற்றும் இன்றும் 'எஸ்ஜியுனைடெட் ஜாப்ஸ் அண்ட் ஸ்கில்ஸ் இன்ஃபர்மேஷன் கியாஸ்க்' எனும் வேலை, பயிற்சி வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கும் கூடம் ஒன்றை அமைக்க சிங்கப்பூர் ஊழியரணி அமைப்புடன் சேர்ந்து 'மார்சிலிங் கரியர்ஸ்' தொண்டூழியர்கள் பணியாற்றினர்.
மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, நேற்று அந்தக் கூடத்திற்கு வருகையளித்தார்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், "தங்களது வாழ்க்கைத் தொழிலின் பல்வேறு கட்டங்களில் குடியிருப்பாளர்கள் இருப்பதை நாங்கள் அறிகிறோம். ஒரு சிலர் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த விரும்புகின்றனர். வேறு சிலர் வேலை மாற விரும்புகின்றனர்.
"அந்த வகையில் மார்சிலிங் குடியிருப்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் பல்வேறு உதவித் திட்டங்கள் நடப்பில் உள்ளன," என்று கூறினார்.

