மருத்துவர்களின் வலது கையாகவும் நோயாளிகளுக்கு உதவும் கரமாகவும் தாதியர்கள் கருதப்படுகின்றனர். அதிலும் கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் தாதிமைத் துறை, நமது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்றி வரும் சேவைகள் பல. சிறந்த தாதியர்களை உருவாக்குவதில் தாதிமைக் கல்வியாளர்களின் பங்கும் இன்றியமையாதது.
அவ்வாறு சேவையாற்றி வரும் 42 வயது ஜெயச்சந்திரன் அமுதா, தற்போது ஊட்ரம் சமூக மருத்துவமனையில் தாதிமை கல்வியாளராக உள்ளார்.
மருத்துவமனையின் தாதிமைப் பாடத்திட்டத்தைத் திட்டமிடுவதுடன் வேலைப்பயிற்சிக்கு வரும் மாணவர்களை அவர்களின் மருத்துவப் பணிகளுக்குத் தயார்ப்படுத்துவதும் பகுத்தறிவுத் திறன்களை அவர்களிடத்தில் வளர்ப்பதும் இவரது பணியில் அடங்கும்.
"ஆறு வருடங்களாக கற்பித்து வந்தாலும் எனது தாதிமைப் பணி 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்தப் பணியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம். ஒரு தாதியராக பணியாற்றுவது என்னைப் பொறுத்தமட்டில் பெருமைக்குரிய ஒன்று. அதிலும் எதிர்காலத் தாதியர்களை உருவாக்கும் கல்வியாளர் பணி மதிப்புமிக்கது. இந்தத் துறை எப்போதுமே என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும்.
"கற்பித்தல் பயணத்தின் ஆரம்ப நாட்களில் பிறருக்கு வழிகாட்டுவதற்கான போதிய அனுபவமோ திறனோ என்னிடம் இல்லை என்று எண்ணி தயங்கினேன். ஆனால் எனக்கு தெரிந்தவற்றை அவர்களுடன் பகிர்வதன் மூலமும் பிறருக்கு சேவை செய்வதை ஊக்குவிப்பதன் மூலமும் நான் அவர்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தேன்," என்று கூறினார் திருமதி அமுதா.
ஆக்கபூர்வ சிந்தனையாளரான இவர், அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதையும் உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதையும் தமது வாழ்க்கை குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தாம் கற்பிக்கும் ஒவ்வொருவர் மூலம் தாமும் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதாக கூறிய திருமதி அமுதா, இந்தப் பணி தன்னை ஒரு மேம்பட்ட நிலைக்கு மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.
திருமதி அமுதா தமது மறக்கமுடியாத அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.
"என்னிடம் படித்து வந்த ஒரு பெண், ஆண் நோயாளிகளுக்கு 'டயப்பர்' மாற்றவும் மாற்ற உதவவும் மறுத்துவிட்டார். அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறினார். அவ்வாறு சங்கடமாக இருக்கும்போதெல்லாம் நோயாளியைத் தன்னுடைய தாத்தா பாட்டியாக நினைத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டேன். உதவி தேவைப்படுபவர் வேறொருவரின் தாத்தா அல்லது பாட்டியாகவோ இருக்கலாம் என்று சொன்னேன். இது அவரிடம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நம்முடைய அன்புக்குரியவர்களிடம் அக்கறை காட்டுவது இயல்பான ஒன்று. அதே எண்ணத்துடன் நோயாளிகளை உறவினராக கற்பனை செய்வது சங்கட உணர்வைப் போக்குகிறது," என்று தெரிவித்தார் திருமதி அமுதா.
இவரது கணவரும் இரு பிள்ளைகளும் இவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். கிருமித்தொற்று நெருக்கடி காலத்தில் குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைந்திருந்தாலும் வீட்டு வேலைகளைச் செய்வது, அதிகாலை எழுந்து வாகனத்தில் தம்மை வேலையிடத்தில் கொண்டு சேர்ப்பது, தொடர்ந்து ஊக்கமளிப்பது என குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பதாக கூறினார் அவர்.
"இந்த தாதிமைக் கல்வியாளர் பணியில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் இது எனக்கு பிடித்தமான ஒன்று. எனது வாழ்க்கையை முழுமையாக்குகிறது. ஒரு நல்ல தாதியராவதற்கு பொறுமையும் சேவை புரியும் மனமும் அவசியம். இதையே நான் கற்பிக்கும்போது வலியுறுத்துகிறேன். நான் கற்றுக்கொடுக்கும்போது எனது பள்ளி நாட்களையும் தாதிமைப் பயிற்சி பெற்ற நாட்களையும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். எனக்குக் கிடைத்த அருமையான ஆசிரியர்களைப் போலவே நானும் ஒரு சிறந்த ஆசிரியராக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்," என்றார் திருமதி அமுதா.

