இப்படியும் மோசடி நடக்கலாம்; ஆண்டின் முதல் பாதியில் 10 மடங்கு அதிகரிப்பு

இப்படியும் மோசடி நடக்கலாம்; ஆண்டின் முதல் பாதியில் 10 மடங்கு அதிகரிப்பு

2 mins read
4f1c61c9-a642-4b1f-a8de-ba2501615b17
மாதிரிப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'உங்களது கணினி அபாயத்தில் உள்ளது; உடனடி நடவடிக்கை தேவை' - என்பதைக் குறிப்பிடும் 'பாப்-அப்' செய்தியைப் பார்த்ததும், தனது கணினியின் ஆன்டி-வைரஸ் மென்பொருள் காலாவதியானது லைனாவுக்கு (உண்மையான பெயர் அல்ல) ஞாபகம் வந்தது.

ஒருவேளை கணினி பாதிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணி அந்த 'பாப்-அப்' செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டார் அவர்.

எதிர்முனையில் பேசிய நபர் தம்மை மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மிகவும் நிபுணத்துவத்துடன் உரையாடத் தொடங்கினார்.

'அல்ட்ராவியூவர்' எனும் மென்பொருளை கணினியில் செயல்படுத்துமாறு கோரப்பட்டதும் லைனா அவ்வாறே செய்தார். அதன்மூலம், லைனாவின் கணினியை எதிர்முனையில் பேசியவர் செயல்படுத்த முடியும் என்று லைனாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

லைனாவின் கணினியை 8 பேர் ஊடுருவியிருப்பதாகத் தெரிவித்ததுடன், அவர்களது புகைப்படம் என்று கூறி எண்மரது படம் லைனாவுக்கு அனுப்பப்பட்டது.

இதனை உண்மை என லைனா நம்பத் தொடங்கினார்.

அந்த ஊடுருவிகளிடமிருந்து லைனாவின் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறி, வங்கிக் கணக்கு விவரங்களை லைனாவிடமிருந்து அந்த நபர் பெற்றுக்கொண்டார்.

சுமார் 2 மணி நேரத்துக்கு அந்த தொலைபேசி உரையாடல் தொடர்ந்தது.

லைனாவின் வங்கிக் கணக்கிலிருந்து $35,000 வேறு கணக்குக்கு மாற்றப்பட்ட செய்தி மறுநாள் காலை குறுஞ்செய்தியாகக் கிடைத்ததும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் லைனா.

உடனடியாக போலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலிசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டனர்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் இத்தகைய மோசடிக்கு 317 பேர் பலியாகினர்; அவர்களிடமிருந்து $15 மில்லியன் தொகையை மோசடிக்காரர்கள் கைப்பற்றினர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அத்தகைய 30 புகார்கள் மட்டுமே பெறப்பட்டன; மோசடிக்காரர்களிடம் சிக்கிய தொகை $340,000.

குறிப்புச் சொற்கள்