புதிதாக தொழில் தொடங்கிய உள்ளூர் நிறுவனம் ஒன்று, டாக்சி மற்றும் வாடகை கார் சேவை வழங்குநர்கள் விதிக்கும் பயணக் கட்டணங்களை ஒப்பிடும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இரு இளம் தொழில்முனைவர்களால் தொடங்கப்பட்ட 'ஸ்பர்' எனப்படும் இந்தச் செயலி, கார் சேவை வழங்கும் கம்ஃபர்ட்டெல்குரோ, கிராப், கோஜெக் ஆகிய மூன்று நிறுவனங்கள் விதிக்கும் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்க வகை செய்கிறது.
இதன் மூலம் கார் பயணத்திற்கு முன்பாக ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனியாக சென்று அது விதிக்கும் கட்டணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. 'ஸ்பர்' செயலியிலேயே எந்த கார் சேவை வழங்குநர் ஆக மலிவான கட்டணத்தை விதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
'ஸ்பர்' இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு மார்க் லிம், 34, கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு கார் பயணத்தின்போதும் $2, $3 என சேமித்தால் நீண்டகாலத்திற்கு பணத்தைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்," என்று அவர் விவரித்தார்.
கார் சேவை வழங்கும் எந்தவொரு நிறுவனத்துடனும் ஸ்பருக்கு தொடர்பில்லை என்று அவர் கூறினார்.
வார நாட்களில் சுமார் 150 பேர் 'ஸ்பர்' செயலியைப் பயன்படுத்துவதாக தெரிவித்த திரு லிம், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
'ஸ்பர்' இணை நிறுவனரும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியுமான திரு திமத்தி கோர், 28, எஸ்எம்ஆர்டி, தடா போன்று கார் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் விதிக்கும் கட்டணங்களையும் செயலியில் உள்ளடக்க அந்நிறுவனங்களை ஸ்பர் அணுகவிருப்பதாகக் கூறினார்.
'ஸ்பர்' செயலியை ஒருவார காலமாக தாம் பயன்படுத்தி வருவதாக தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஷான் குவோக், 28, குறிப்பிட்டார். இந்தச் செயலில் பயனாளருக்கு உகந்ததாக இருந்தாலும் அதில் ஒரு சில அம்சங்கள் மேம்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
தோ பாயோ நார்த் பகுதியிலிருந்து ஐயான் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதிக்குச் செல்ல கம்ஃபர்ட்டெல்குரோ, கிராப், கோஜெக் ஆகிய மூன்று நிறுவனங்கள் விதிக்கும் கட்டணத்தை ஒரே செயலியில் பார்க்கலாம். படம்: ஸ்பர் செயலி

