தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் முடிந்த பிறகும் ஏதோ ஒரு வகையில் உதவி தொடர்ந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அத்தகைய வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்படக்கூடிய கட்டணச் செலவுகளை ஈடு செய்ய இப்போது இடம்பெற்று வரும் ஆதரவுத் திட்டங்கள் இந்த மாதம் முடிகின்றன.
இந்த ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து உதவும் திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு செயல்பட்டு வருவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஃபேஸ்புக்கில் சனிக்கிழமை தெரிவித்தார்.
அமைச்சர், கடந்த மூன்று வார காலமாக இத்தகைய வாகன ஓட்டுநர்களையும் சேவை நடத்துவோரையும் சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.
ஆதரவுத் திட்டங்கள் விரைவில் முடிவடைய இருப்பதை அவர்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். வயது கூடிய வாகன ஓட்டுநர்கள் இந்தத் தொழிலையே பெரிதும் நம்பி இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உதவு முடியுமா என்று சிலர் கேட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
"அவர்கள் தெரிவித்த கருத்துகள், யோசனைகள் பரிசீலிக்கப்படும், உதவித் திட்டம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆதரவுத் திட்டம் நீட்டிக்கப்படுவதைத் தான் வரவேற்பதாக கோஜெக் நிறுவனம் தெரிவித்தது. தன் நிறுவனத்தின் வாகன ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் சிரமங்களில் சிலவற்றைக் குறைக்க அவை உதவும் என்று நிறுவனம் கூறியது.
கோஜெக் நிறுவனத்தின் நிர்வாகத்தினரும் வாகன ஓட்டுநர்களும் அண்மையில் அமைச்சரை சந்தித்தனர். கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டுர்களுக்கு உதவும் திட்டங்களை சில மாதங்களுக்கு முன் அரசு அறிவித்தது. இந்தத் துறைக்கு உதவ மொத்தம் $216 மில்லியனுக்கும் அதிக தொகை ஒதுக்கப்பட்டது.
ஆதரவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறப்பு நிவாரண நிதி ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் ஒரு வாகனத்துக்கு ஒரு மாதத்துக்கு $300 நிவாரணம் பெறுகிறார்கள். இது இம்மாதத்துடன் முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க, சுய தொழில் வருவாய் நிவாரணத் திட்டத்தின் மூலமாக இவர்களுக்கு ஒன்பது மாத காலம் மாதம் $1,000 தொகை கிடைத்து வந்துள்ளது. கொவிட்-19 தொற்று காரணமாக சுற்றுப் பயணிகள் வருகை அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டதால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர்.

