சிங்கப்பூரில் 'டிரேஸ்டுகெதர்' கருவிகளை விநியோகம் செய்யும் பணிகள் இன்று தொடங்கின. கருவிகளை வழங்குவதன் மூலம் கொவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறியும் முயற்சிகள் தீவிரமடையும் என்பது நம்பிக்கை. இதனால் திட்டத்திற்கு அரசாங்கத்தின் குறிக்கோளான 70 விழுக்காட்டு பங்கேற்பை அடையலாம் என்று தெரிவித்தார் அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.
ஜாலான் புசார் சமூக மன்றத்தில் 'டிரேஸ்டுகெதர்' கருவிகளின் விநியோகப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் எத்தனை கருவிகள் உருவாக்கப்படும் என்றும் விநியோகம் செய்யப்படும் என்றும் எண்ணிக்கைகள் குறித்துத் தமக்கு எந்த ஓர் இலக்கும் இல்லை என்று கூறினார் அமைச்சர் விவியன்.
ஆனால் இக்கருவிகள் 'டிரேஸ்டுகெதர்' செயலியுடன் இணைந்து செயல்படும் என்றும் இலக்கை அவ்வாறு அடைய முடியும் என்பதையும் கோடிட்டார்.
"கருவிகள் எத்தனை என்பது முக்கியமல்ல. 'டிரேஸ்டுகெதர்' திட்டத்திற்கு எத்தகைய பங்கேற்பு விகிதம் உள்ளது என்பதுதான் நோக்கம். கைபேசிகளில் உள்ள செயலியுடன் இக்கருவிகள் ஒங்கிணைந்து செயல்படுகின்றன. அதனால் கருவிகளில் எண்ணிக்கைக்கு எந்த ஓர் இலக்கும் எனக்கில்லை. 70% பங்கேற்பு விகிதம் மற்றும் அதற்கு மேல் செல்வதே என் விருப்பம்," என்றார் திரு விவியன்.
இருப்பினும் இந்த இலக்கை அடைவதற்கான கால வரையறையை அவர் குறிப்பிடவில்லை.
இதுவரை 'டிரேஸ்டுகெதர்' செயலியை 2.4 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சிங்கப்பூரின் மக்கள்தொகையின் 40 விழுக்காடே.
ஏற்கெனவே ஜூன் மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 மூத்த குடிமக்களுக்கு 'டிரேஸ்டுகெதர்' கருவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புகளின் தடமறியும் முயற்சியில் உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் அதிகளவு பங்கேற்பு உள்ளது என்றாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு என்று வெளியுறவு அமைச்சராகவும் உள்ள அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.
'டிரேஸ்டுகெதர்' கருவிகளின் விநியோகப் பணிகள் ஜாலான் புசார் மற்றும் தஞ்சோங் பகார் வட்டாரங்களில் உள்ள 20 சமூக மன்றங்களில் நேற்று தொடங்கின.
அவ்வாறு ஹவ்காங்கில் குடியிருக்கும் 66 வயது திரு அஜித் குமார் கருவியைப் பெற்றுக்கொள்ள ஜாலான் புசார் சமூக மன்றத்திற்குச் சென்றிருந்தார். தொடர்புகளின் தடமறியும் முயற்சியில் தாமும் பங்கேற்க விரும்பியதால் அங்கு சென்றதாகவும் 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
"என் பாதுகாப்புக்காக இலவசமாக வழங்கப்படும் இந்த கருவியைப் பெற்றுக்கொள்ள இங்கு வந்தேன்," என்றார் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரியும் திரு அஜித்.

