எதிர்த்து வழக்காடாத, வழக்கறிஞர் வாதம் இல்லாத மணவிலக்குக்கு விண்ணப்பிக்கும் தம்பதிகள் அவர்கள் விரும்பும் மணவிலக்கை நீதிமன்றத்துக்குச் செல்லாமலும் நீதிமன்ற ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்காமலும் இணையம் வழி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
'லிட்டிகேஷன் அசிஸ்ட்' எனும் புதிய இணைய வாசல் மூலம் வழக்காடுபவர்கள் நீதிமன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் இன்று நடைபெற்ற சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் வருடாந்திர குடும்ப மாநாட்டில் தெரிவித்தார்.
"தேவை ஏற்படுமாயின் இந்த இணைய வாசல், மணவிலக்கு கோரும் தம்பதிகளை சமரச வழக்கறிஞர்களுடன் இணைத்து வைக்கும். அவர்கள் இணையம் வழி தம்பதிகளுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள்," என்று திரு மேனன் விவரித்தார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரை உள்ளடக்கிய பேச்சாளர்கள் குடும்பச் சட்டத்தை செயல்படுத்துவது பற்றி கலந்துரையாடுவார்கள்.
'லிட்டிகேஷன் அசிஸ்ட்' இணைய வாசல் குடும்பச் சட்ட முறையைப் பயன்படுத்தும் வழிகளை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தங்களுக்குள் கசப்பாகி விட்ட உறவை சீர்செய்ய தம்பதிகளுக்கு குடும்பச் சட்ட முறை உதவும் என்றார். "குடும்பச் சட்ட முறை தொடர்பான செயல்பாடுகளில் சமூக சேவைகள், மனநலச் சுகாதாரம், சட்ட அமலாக்கப் பிரிவுகள் போன்ற இதர பங்காளிகளுடன் இணைந்து நீதிமன்றங்கள் செயல்படும்.
"உதாரணத்துக்கு, குழந்தையைக் கொடுமைப்படுத்துதல் சம்பவம் தொடர்பில் குடும்ப நீதிமன்றங்கள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவை இணைந்து தகவல் பரிமாற்றம் மூலம் ஒருங்கிணைந்த தீர்வு காணலாம்," என்றும் தலைமை நீதிபதி திரு மேனன் தமது உரையில் விளக்கினார்.

