துவாஸ் சோதனைச் சாவடியில் ஐந்து தண்ணீர்த்தொட்டி லாரிகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்ட 53,249 புகையிலைப் பொட்டலங்களை அதிகாரிகள் இம்மாதம் 7ஆம் தேதி காலை சுமார் 6.45 மணிக்குப் பறிமுதல் செய்தனர்.
அந்த லாரிகளை மலேசியாவில் இருந்து ஓட்டிவந்த ஆடவர்கள் ஐந்து பேரை விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையம் தடுத்து வைத்துள்ளது. அவர்கள் அனைவரும் மலேசியர்கள் என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. பறிமுதலான புகையிலை இந்த ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு $213,000 ஆகும்.
வாயில் போட்டு மெல்லக்கூடிய இத்தகைய புகையிலைப் பொருட்கள் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அவற்றை சிங்கப்பூருக்குள் கொண்டு வரவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் இறக்குமதி, விநி யோகம், விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் www.go.gov.sg/reporttobaccooffences என்ற இணையத்தளம் மூலம் அவற்றைத் தெரிவிக்கலாம்.
அல்லது 6684 2036, 6684 2037 என்ற எண்கள் மூலம் இந்த ஆணை யத்துடன் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

