மோசடிகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தடுக்க உதவிய 108 தனிப்பட்டவர்களையும் 15 நிறுவனங்களையும் வர்த்தக விவகாரத் துறை விருது வழங்கி பாராட்டி சிறப்பித்துள்ளது.
இத்தகைய சிறப்பிப்புகள், மோசடிகளைத் தடுப்பதில் வர்த்தக நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகின்றன.
இந்த விருதுக்கு, 'வர்த்தக விவகாரப் பிரிவின் சமூகப் பங்காளித்துவ விருது' என்று பெயர்.
இவற்றைப் பெற்ற நிறுவனங்களில் வங்கிகள், பணம் அனுப்பும் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் பலவும் அடங்கும். சென்ற ஆண்டு இந்த விருதைப் பெற்றவர்கள் 91 மோசடி விவகாரங்களைக் கண்டுபிடித்தனர்.
அதனால் $5 மில்லியனுக்கும் அதிக தொகை தப்பியது. 2018ல் 87 மோசடி விவகாரங்களில் $1 மில்லியனுக்கும் அதிக தொகை பறிபோக இருந்தது.
அந்த மோசடிகளைத் தனிப்பட்டவர்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டுபிடித்து தடுத்துவிட்டதால் பணம் தப்பியது. நிதி நிறுவனங்கள் விழிப்புடன் உடனுக்குடன் விவேகமாக நடந்துகொள்வது இதற்கு ஒரு காரணம் என்று போலிஸ் அதிகாரிகள் கூறினர்.
வர்த்தக விவகாரத் துறையும் இத்தகைய நிறுவனங்களும் சேர்ந்து மோசடி தவிர்ப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு உருவாக்கி அவற்றை அமல்படுத்துவதும் இதற்குக் காரணம் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இது பற்றி கருத்துரைத்த வர்த்தக விவகாரத் துறையின் இயக்குநர் டேவிட் சியூ, "கொவிட்-19 காரணமாக மின்னிலக்கப் பயனீடு வழக்கமானதாக ஆகிவிட்டது. இதில் மோசடிகள் அதிகம் தலைகாட்டுகின்றன. இத்தகைய மோசடிகளைத் தடுப்பதில் போலிசுக்கும் சமூகத்துக்கும் இடைப்பட்ட ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இதைத்தான் சமூக பங்காளித்துவ விருது எடுத்துக்காட்டுகிறது," என்று குறிப்பிட்டார்.
மோசடிப் பேர்வழிகள் சிக்கலான பல வழிகளைக் கையாண்டு ஏமாற்ற முயல்கிறார்கள்.
இத்தகைய மோசடி முயற்சி ஒன்றை அண்மையில் ஒசிபிசி வங்கி ஊழியர்கள் முறியடித்தனர்.

