சட்டத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு

சட்டத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக சட்ட நிறுவனங்களுக்குச் சென்ற ஆண்டு நிதி உதவி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இறுதி நாள் இவ்வாண்டு மே 1 என்று கூறப்பட்டது.

இருப்பினும் இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் நேற்று கூறினார்.

‘டெக்-செலரேட்’ எனப்படும் இத்திட்டத்திற்கான ஆதரவு மானியத் தொகையிலிருந்து அடிப்படை, உயர்நிலை தொழில்நுட்பத் தேவைகளுக்கான செலவில் 70% வரை நிறுவனங்கள் முதலாண்டில் பெற்றுக்கொள்ளலாம் என முன்னர் கூறப்பட்டது. இதுவும் இனி 80 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் டோங் தெரிவித்தார்.

சட்ட நிறுவனங்கள் தங்களின் சேவைகளை மேம்படுத்திப் போட்டித்தன்மையுடன் இருக்கத் தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் என்று மெய்நிகர் ‘ஆர்ஹெச்டி கபா ஆசியான்’ மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தாக்கத்திலிருந்து சட்டத் துறை தன்னைக் காத்துக் கொள்வதற்கும் வியாபாரத்திற்கு நம்பிக்கையான இடமாகத் தொடர்ந்து இருப்பதற்கும் சிங்கப்பூரின் சட்ட விதிமுறைகளே காரணம் என்றார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சராகவும் உள்ள திரு டோங்.

இந்த ‘புதிய இயல்புநிலை’படி தொழில்நுட்பத்தை விரைந்து பயன்படுத்துவதுடன் மூலதனமாக்கும் சட்ட நிறுவனங்கள் தங்களின் சேவைகளின் பயன்பாடு, தரம், மதிப்பு, விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்றும் அது நீடித்த காலத்திற்கு ஒரு சாதக நிலையைத் தரும் என்றும் அவர் சுட்டினார்.

சட்டத் துறைக்கு மேலும் கைகொடுக்க, ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திட்டம்’ அடுத்த மாதம் தொடங்கி வைக்கப்படும். சட்டத் தொழில்நுட்பச் சூழலையும் கட்டமைப்பையும் சட்ட நிறுவனங்கள் மேலும் நன்கு புரிந்துகொள்ள இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் தொழில்நுட்பச் சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது, தற்போதுள்ள மற்றும் புதிதாக அறிவிக்கப்படவுள்ள அரசாங்கத் திட்டங்களை அடையாளங்கண்டு எப்படி பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றுக்காக சட்ட நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை நாடலாம்.

“வர்த்தக உலகின் அதிவிரைவாக மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுக்க படிப்படியான சட்ட விதிமுறைகள் இருப்பது முக்கியம். இதற்காக நாங்கள் சட்டத் துறையின் வெவ்வேறு அம்சங்களுடைய கட்டமைப்புகளை அடிக்கடி மறுஆய்வு செய்து வருகிறோம்,” என்றார் திரு டோங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon