சிங்கப்பூரில் இரு பண்ணை நிலங்களுக்கு ஏலக்குத்தகை அறிவிப்பு

லிம் சூ காங், சுங்கை தெங்கா பகுதிகளில் இரு பண்ணை நிலங்களுக்கு ஏலக்குத்தகை கோரப்பட்டுள்ளது.

நியோ டியூ கிரசண்ட்டில் உள்ள 10,000 சதுர மீட்டருக்கும் அதிகமான நிலத்தை உணவுப் பயிர்கள், கடல்வாழ் உணவு, காடை முட்டை, கால்நடைகள் அல்லது ஆடு வளர்ப்பு, தவளை வளர்ப்பு போன்றவற்றுக்காகப் பயன்படுத்தலாம். 11,900 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட சுங்கை தெங்காவில் உள்ள நிலப்பகுதியில் காய்கறிகள் பயிரிடலாம்.

கிட்டத்தட்ட இரண்டு காற்பந்துத் திடல்களின் அளவுகொண்ட அவ்விரு நிலங்களும் 20 ஆண்டு குத்தகைக்கு விடப்படும். இவ்விரு நிலப்பகுதிகளை குத்தகைக்கு எடுக்க விரும்புவோர் இவ்வாண்டு நவம்பர் 10ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் தங்களது ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிக்க வேண்டும். சிங்கப்பூர் உணவு அமைப்பு இந்த ஏலக்குத்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஊட்டச்சத்து தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூர் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2017ஆம் ஆண்டில் இருந்து வேளாண் நிலங்கள் விற்பனைக்கு விடப்படுவது இது ஆறாவது முறை.

இவ்வாண்டு ஜனவரியில் நியோ டியூ கிரசண்ட்டில் 10,000 சதுர மீட்டர் நிலம் $500,000 தொகைக்கு ‘ஹே டெய்ரிஸ்’ நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

பண்ணைகளின் உற்பத்தித் திறன், கடந்தகாலச் செயல்பாடுகள், உரிய அனுபவம், தகுதிகள், புத்தாக்கம், தொழில் வாய்ப்பு, கழிவு நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் மதிப்பிடப்படும்.

நீடித்த காலத்திற்கு உயர்ந்த உற்பத்தி நிலைகளை எட்டக்கூடிய ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பித்தோருக்கு அவ்விரு நிலங்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு குறிப்பிட்டது.

“வேளான் உணவு உற்பத்திக்கு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நிலம் ஒதுக்கப்படும் நிலையில், நிலம், நீர், ஆற்றல் ஆகிய அரிதான வளங்களைச் செயல்திறன்மிக்க வகையில் நமது பண்ணைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அவ்வமைப்பு கூறியது.

உற்பத்தித்திறனை உயர்த்தவும் பருவநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடித்து, மீள்வதற்கும் பண்ணைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தி இருக்கிறது.

சிங்கப்பூரின் பண்ணை நிலங்கள் பெரும்பாலும் லிம் சூ காங்கிலும் சுங்கை தெங்காவிலும்தான் இருக்கின்றன.

லிம் சூ காங் வேளாண் பகுதிக்கான ‘ஒரு துடிப்புமிக்க தொலைநோக்குப் பார்வையை’ உருவாக்க வேளாண் நிறுவனங்களுடன் சிங்கப்பூர் உணவு அமைப்பு இணைந்து பணியாற்றும் என்று அவ்வமைப்பின் உணவு விநியோக மீட்சிக்கான மூத்த இயக்குநர் திரு மெல்வின் சோ தெரிவித்தார்.

கழிவுக் குறைப்பு போன்ற சுழற்சிப் பொருளியல் கொள்கைகளையும் ஒருங்கிணைத்து, உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அந்த வட்டாரத்தை எவ்வாறு மறுமேம்பாடு செய்வது என சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon