ஆய்வு: போதிய, பாதுகாப்பான, சத்தான உணவைப் பெற 10% சிங்கப்பூரர்கள் தவிப்பு

சிங்கப்பூரர்களில் 10 பேரில் ஒருவர், கடந்த 12 மாதங்களில் போதிய, பாதுகாப்பான, சத்தான உணவைப் பெற குறைந்தது ஒரு தடவையாவது சிரமப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இந்த 10.4 விழுக்காட்டில், ஐந்தில் இரண்டு வீடுகள் மாதம் ஒரு முறையாவது இதுபோன்ற உணவைப் பெற சிரமப்பட்டன.

இந்த குடும்பங்கள் பெரும்பாலும் ஓரறை அல்லது ஈரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்பவர்களாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யூ) சமூக புத்தாக்கத்திற்கான லீன் மையத்தின் ஆய்வாளர்களால் கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில் ஏறக்குறைய 1,200 குடும்பங்கள் பங்கேற்றன.

ஆய்வின் நோக்கம் “உணவு பாதுகாப்பின்மை”யின் பாதிப்பு, காரணங்கள், விளைவுகளை கண்டுபிடிப்பதாகும்.

‘சிங்கப்பூர் உணவு வங்கி’ எனும் உணவு அறநிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ‘பசி அறிக்கை: சிங்கப்பூரில் உணவு பாதுகாப்பின்மை பற்றிய ஆழமான பார்வை’ என்ற இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

எஸ்எம்யூ ஆய்வாளர்கள் இதேபோன்ற ஆய்வை 2018இல் நடத்தினர். அதில் 236 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பங்கேற்றன.

டாக்டர் தன்யா நாக்பால், டாக்டர் டால்வின் சித்து, திருமதி ஜின்வென் சென் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்த ஆண்டின் ஆய்வில், உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களின் தலைவர்கள் குறைந்த கல்வித் தகுதிகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழகப் படிப்பை முடித்திருக்கும் வாய்ப்பும் மிகக் குறைவு என அறியப்படுகிறது.

“உணவு பாதுகாப்பின்மைக்கு வருமானம் ஒரு தொடர்ச்சியான காரணி என்பதை இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது, உணவு பாதுகாப்பின்மைக்கான 79% காரணங்கள் நிதி சிரமங்களை மையமாகக் கொண்டுள்ளன,” என்று ஆய்வு குறிப்பிட்டது.

நேரம் போதாமை, கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம், இயக்கம், சிறைவாசம், வாழ்க்கைத் துணையை இழந்த துயரம், குடும்ப முறிவு ஆகியவை ஏனைய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆய்வு நடத்தப்பட்ட நேரத்தில் உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களில் 22 விழுக்காட்டினர் மட்டுமே உணவு ஆதரவைப் பெறுபவர்களாக இருந்தனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக பரிந்துரைகளையும் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

“உணவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு வழங்குவதில் அதிக உத்திபூர்வமான ஒருங்கிணைப்பு தேவை.

“அரசாங்கம், லாப நோக்கமற்ற அமைப்புகள், தனியார் துறைகளுக்கிடையிலான பல துறைகள் பங்காளித்துவம் அடிப்படையிலான உணவு ஆதரவுத் திட்டத்துக்கு தேசிய அளவில் உத்திபூர்வமான ஒருங்கிணைப்பு தேவை,” என்று ஆய்வு கூறியது.

மேலும், இந்த விவகாரம் குறித்து அதிகமான விழிப்புணர்வும் கருணை உணர்வும் ஏற்பட சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த அதிக தகவல்களும் அறிவும் தேவை என்றும் அது சுட்டியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon