சுடச் சுடச் செய்திகள்

அதிவேக கார் விரட்டல்: 29 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது

மத்திய விரைவுச்சாலையில் இருந்து கேன்பரா ஸ்திரீட் வரை கடந்த சனிக்கிழமை அதிவேக கார் விரட்டலில் சம்பந்தப்பட்ட 29 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இதில் சம்பந்தப்பட்ட காரிலிருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை அவர் தப்பிச் சென்றார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர் போக்குவரத்து குற்றங்கள் புரிந்ததன் தொடர்பிலும் போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதிகாரிகளின் அமலாக்க நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு சிங்கப்பூரர்கள் பிடிபட்டனர். அவர்கள் 25க்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சுமார் ‘ஐஸ்’ எனப்படும் 7 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் நிகழ்ந்த கார் விரட்டலின் ஒரு பகுதி காணொளியில் பதிவானது. சமூக ஊடகங்களில் அந்தக் காணொளி வேகமாகப் பரவியது.

அங் மோ கியோ அவென்யூ 1 அருகே சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் போக்குவரத்து போலிஸ் அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விரைவுச்சாலையின் வலது தடத்தில் கார் ஒன்று மெதுவாக சென்றுகொண்டிருந்ததை அவர்கள் கவனித்தனர்.

காரை நிறுத்தும்படி அதன் ஓட்டுநரிடம் அதிகாரிகள் சைகை காட்டினார்கள். ஆனால் அந்த காரை ஓட்டியவர் அதிகாரிகளுக்குக் கட்டுப்படாமல் காரை வேகமாக ஓட்டினார்.

அதிகாரிகளும் வாகனங்களில் காரை விரட்டினார்கள். கடைசியில் செம்பவாங்கில் உள்ள கேன்பரா ஸ்திரீட்டில் மரத்தின் மீது மோதி கார் நின்றது.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காதது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படுவது போன்ற குற்றங்களுக்காக அந்த காரை ஓட்டிய 31 வயது ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

எனினும், அந்த காரில் இருந்த சிங்கப்பூர் ஆடவர் தப்பிச் சென்றுவிட்டார். அதிகாரிகளின் தீவிர விசாரணைக்குப் பிறகு அந்த ஆடவரின் அடையாளத்தை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்தனர். காரிலிருந்து வெளியேறிய பிறகு வேறொரு வேனில் ஏறி அவர் தப்பிவிட்டதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த வேனை ஓட்டிய 34 வயது ஆடவர், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கார்ப்பரேஷன் வாக் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அதே நாள் மாலையில், ஹோ சிங் ரோட்டில் 31 வயது ஆடவரையும் 25 வயது மாதையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 1 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கூறப்பட்ட கார் விரட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய அந்த ஆண் பயணியிடமிருந்து இரு வாரங்களுக்கு முன்பு போதைப்பொருளை அந்த மாது வாங்கியதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் செங்காங்கில் உள்ள ஆங்கர்வேல் ரோட்டில் 29 வயது ஆடவர் ஒளிந்திருந்த இடத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கதவைத் திறக்க அவர் மறுத்துவிட்டதால் அதிகாரிகள் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைய நேரிட்டது. அந்த ஆடவரை கைது செய்ய அதிகாரிகள் முற்பட்டபோது அவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

அங்கிருந்த 31 வயது மாதும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் நான்கு மாத கைக்குழந்தையும் இருந்தது.

கர்ப்ப காலத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளை அந்த மாது உட்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது குழந்தை உறவினர் ஒருவரிடம் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon