வேலைகள்: பாதகங்களிலும் கொஞ்சம் சாதகமான நிலவரங்கள்

கொவிட்-19 காரணமாக உலகெங்கும் சாதாரண உடலுழைப்பு தொழிலாளிகள் முதல் மாதாமாதம் அதிக சம்பளம் ஈட்டி வந்த படித்த ஊழியர்கள் வரை ஏராளமான மக்கள் வேலையிழந்துவிட்டனர்.

ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே வேலை பார்க்கும் விதமும் மாறி இருக்கிறது. பல நிறுவனங்கள் இன்னமும் கதவுகளை மூடியே வைத்து இருக்கின்றன. சில நிறுவனங்கள் ஓரளவுக்குச் செயல்படத் தொடங்கி இருக்கின்றன.

உலகப் பொருளியல் இன்னமும் ஏறுமுகமாக மாறவில்லை. பல வேலைகள் கொவிட்-19க்குப் பிறகு தொடர்ந்து இருக்குமா என்பதும் தெரியவில்லை. வீட்டில் இருந்தே வேலை செய்வதும் வீட்டில் இருந்தே படிப்பதும் கொவிட்-19 உலகளவில் ஏற்படுத்தி இருக்கும் புதிய பாணிகள்.

கொரோனா கிருமி பரவலைத் தடுக்க பல நாடுகளும் பொருளியலை இழுத்து மூடியதால் ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல. கிருமியைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் நடப்புக்குக் கொண்டு வந்தது.

குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரை அந்தக் கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. அப்போது பொருளியல் ஏறக்குறைய நிலைகுத்திப் போய்விட்டது. சிங்கப்பூரில் வேலை இழப்புகளும் அப்போதுதான் அதிகம் இடம்பெற்றன. அப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டதில் வியப்புக்கு இடமில்லை. சிங்கப்பூர் இதுவரை காணாத அளவுக்கு மூன்று மாத கால பொருளியல் முடக்கத்தை அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவித்தது.

இருந்தாலும் மனிதவள அமைச்சின் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான இரண்டாவது காலாண்டிற்கான தொழிலாளர் சந்தை அறிக்கையைப் பார்க்கையில் கொஞ்சம் ஊக்கமளிக்கும் நிலவரங்கள் தெரியவந்து இருக்கின்றன.

எல்லா துறைகளிலுமே வேலை இழப்பு இருந்து வந்துள்ளது என்றாலும் சில துறைகள் மிக அதிக மீள்திறனுடன் தலையெடுப்பதைக் காணமுடிகிறது. சில துறைகளில் புதிய வேலைகள் கூட உருவாகி இருக்கின்றன என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. மொத்தத்தில் வேலை போனவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் அது அதிகமாகத்தான் இருக்கும். குறைந்தால்தான் வியப்பு.

சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை வேலையில்லாத விகிதம் 3.5 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் கூடியது.

நிரந்தரவாசிகளைப் பொறுத்தவரை, அந்த அதிகரிப்பு 3.3%லிருந்து 3.8% ஆக இருந்தது.

வெளிநாட்டு வீட்டு வேலை பணிப்பெண்களை நீக்கிவிட்டுப் பார்க்கையில் மொத்தம் 103,500 பேர் வேலையின்றி இருந்தார்கள்.

எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது இந்த அளவு வியப்பளிக்கும் ஒன்றாகத் தெரியவில்லை. முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது காலாண்டில் ஆட்குறைப்புகள் இரண்டு மடங்காக அதிகரித்தன. இருந்தாலும்கூட முன்பு பொருளியல் மந்தம் உச்சத்தில் இருந்தபோது இடம்பெற்ற ஆட்குறைப்பு எண்ணிக்கையைவிட இவை குறைவாகத்தான் இருந்தன.

இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது ஆட்குறைப்புக்கு ஆளான உள்ளூர் ஊழியர்களும் குறைவாக இருந்தனர்.

வேலை ஆதரவுத் திட்டம் என்ற உதவித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்து சம்பள மானியங்களை அரசாங்கம் வழங்கியது, உள்ளூர் ஊழியர்களை ஆட்குறைப்பில் இருந்து காப்பாற்றுவதில் மிக முக்கிய பங்களித்தது.

ஆட்குறைப்புக்கு ஆளானவர்களைப் பார்க்கையில் வயது, கல்வி எதுவும் பெரிதாகத் தெரியவரவில்லை. சிலர் பலரைவிட மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 30 வயதும் அதற்குக் குறைவான வயதுள்ளவர்களிடையே ஆட்குறைப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அதுபோலவே 60 வயதும் அதற்கு அதிகமான வயதுள்ளவர்களும் பட்டக் கல்வி இல்லாதவர்களும் அதிக ஆட்குறைப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக நடப்பில் இருந்த காலத்தில் அவற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களும் சுற்றுலா, கட்டுமானம், சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு, உணவு, பானம் போன்ற பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களும் வேலை இழந்தவர்களில் அதிகமானவர்கள் என்று தெரிகிறது.

சிங்கப்பூரை பொறுத்தவரை வேலை வாய்ப்பு குறைந்ததற்கு நிறுவனங்கள் மூடப்பட்டது முக்கிய காரணமாக இல்லை. இது ஊக்கமூட்டும் ஒரு நிலவரமாக இருக்கிறது.

இந்த ஆண்டின் முதல்பாதியில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையிழந்தவர்கள், மொத்தம் வேலை இழந்தவர்களில் 3.8 விழுக்காட்டினர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது சந்தை நிலவரங்கள் மேம்படும்போது நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களைச் சேர்க்கத் தொடங்கிவிடும் என்ற எண்ணத்தை இந்த நிலவரங்கள் ஏற்படுத்துகின்றன. ஆனாலும் இதில் ஒரு முக்கிய சோதனை இருக்கிறது. வேலை ஆதரவு திட்டம் முடிந்ததற்குப் பிறகு நிறுவனங்கள் எப்படி செயல்படும் என்பதைப் பொறுத்தே ஊழியர் சேர்ப்பு இருக்கும் என்று கருதுவதற்கும் இடமுண்டு.

கொவிட்-19 ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள் ஏராளம் என்றாலும் அந்தப் பாதகச் சூழலுக்கு இடையே சாதகமான ஒரு சூழலையும் சிங்கப்பூர் சந்தித்து வருகிறது என்பது பெருமூச்சுவிடக்கூடிய அளவுக்கு மனநிறைவு அளிப்பதாக உள்ளது.

உலக மந்தம் இருந்தாலும், வர்த்தக பதற்றங்கள் கூடினாலும் சிங்கப்பூர் தொடர்ந்து முதலீட்டாளர்களை ஈர்த்து வந்துள்ளது, ஈர்த்து வருகிறது என்பது மகிழ்ச்சிகரமான, வரவேற்கத்தக்க ஒரு சூழலாக இருக்கிறது. சீனாவின் பிரம்மாண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட சிங்கப்பூரில் பெரும் பணத்தை முதலீடு செய்யப்போவதாக அறிவித்து இருக்கின்றன.

இவை எல்லாம் அடுத்த சில ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகச் சாதகமாக இருக்கும் என்பதால் வேலைகளைப் பொறுத்தவரைகுறுகிய காலத்திலும் இடைப்பட்ட காலத்திலும் அதிக சிரமங்கள் இருக்கும் என்றாலும் வேலைச் சந்தை, வருங்காலத்தில் சிறந்த நிலைக்கு மாறிவிடும் என்று நம்புவதற்கு அதிக இடமுண்டு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!