கூடுதலாக 2 நாள் சிறைவாசம் அனுபவித்தவருக்கு இழப்பீடு

பாசிர் ரிஸ் பகுதியில் 2018 டிசம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்து தொடர்பில் டியோ செங் டியோங், 59, என்ற லாரி ஓட்டுநருக்கு கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி ஏழு வாரச் சிறைத்தண்டனையும் $500 அபராதமும் விதிக்கப்பட்டது.

அவற்றோடு, இரண்டு ஆண்டு காலத்துக்கு அனைத்து வகை வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெறவும் வைத்திருக்கவும் அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

டியோ அபராதத்தைக் கட்டவில்லை என்றால் அவர் மேலும் மூன்று நாட்கள் சிறையில் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து டியோ உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தோற்றார். அதனை அடுத்து அபராதத்தைச் செலுத்திவிட்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.

இப்படி இருக்கையில், டியோ அபராதம் செலுத்திய விவரங்களை உயர் நீதிமன்றம், அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்தது. ஆனால் அரசு நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் செய்த நிர்வாகத் தவறு காரணமாக அந்த விவரங்கள் பதியப்படவில்லை.

இதன் விளைவாக டியோ கூடுதலாக இரண்டு நாட்கள் சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கடைசியில் டியோ, இரண்டு நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 24ஆம் தேதிதான் விடுதலையானார்.

டியோ அபராதம் செலுத்தியதற்கான ஆதாரங்களை அவருடைய வழக்கறிஞர் சிறைத் துறைக்கு அனுப்பிய பிறகே இது தெரியவந்தது. இதனை அடுத்து அரசாங்கத்துக்கும் டியோவுக்கும் இடையில் இழப்பீட்டு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. அதன்படி டியோவுக்குப் பணம் கிடைக்கும். ஆனால் அதை அவர் வெளியிடக்கூடாது என்பது நிபந்தனை.

டியோ ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்.

என்றாலும் சிறை வாழ்க்கை தனக்கு நல்ல அனுபவங்களைப் போதித்து இருப்பதாகவும் தான் திருந்திவிட்டதாகவும் டியோ தெரிவித்தார்.

கூடுதலாக சிறையில் இருந்ததற்காகக் கிடைத்த பணம் எவ்வளவு என்று பலரும் தன்னை நச்சரித்து வருவதாகவும் ஆனால் ரகசியத்தை தான் உறுதியாக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!