எட்வின் டோங்: சமூக முன்னேற்றத்தையும் நற்பண்புகளையும் சட்டங்கள் பிரதிபலிக்க வேண்டும்

எது குற்றம் என தீர்மானிக்கவும் குற்றத்திற்குப் பொருத்தமான தண்டனை எது என்பதை முடிவு செய்யவும் உருவாக்கப்பட்டு உள்ள எல்லா சட்டங்களும் சிங்கப்பூர் சமூகத்தின் முன்னேற்றத்தையும் நற்பண்புகளையும் பிரிதிபலிப்பதாக இருக்க வேண்டும். கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் இதனைத் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரின் குற்றவியல் நீதி அமைப்பு, காயம் ஏற்படுத்துவதையும் பாலியல் குற்றங்களையும் தண்டிக்கும் கட்டமைப்பு ஆகியன குறித்து விவாதிப்பதற்காக இன்று நடத்தப்பட்ட மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார் இரண்டாம் சட்ட அமைச்சருமான திரு டோங்.

தேசிய இளையர் மன்றம், உள்துறை அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்வில் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 50 பேர் கலந்துகொண்டனர்.

குற்றவியல் நீதி அமைப்பில் தண்டனை விதிப்பதற்கான நடைமுறையை இளையர்கள் புரிந்துகொள்வதற்கும் உதவியாகவும் அதுகுறித்து அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளைக் கேட்டறியவும் இந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ மாணவரான யின் ஸி குயின், 23, என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் தமது முன்னாள் காதலியைத் தாக்கியதற்காக கடந்த ஜூலை மாதம் சமூகம் சார்ந்த தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கலந்துரையாடலுக்கான அவசியம் ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தின்போது அந்தப் பெண்ணின் குரல்வளையை நெரித்ததோடு அவரது கண்ணில் தமது கட்டை விரலால் அழுத்தியதைத் தொடர்ந்து ரத்தம் சொட்டியது.

இதற்கான தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதேபோன்ற சம்பவங்களுக்கான தண்டனைக் கட்டமைப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. மாணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுமார் 500 இளையர்களிடம் கருத்து திரட்டப்பட்டதாக தேசிய இளையர் மன்றம் தெரிவித்தது. ஜுலை 22, ஜூலை 23 ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றதாகவும் மாணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என பத்தில் ஒன்பது பேர் கூறியதாகவும் மன்றம் குறிப்பிட்டது.

மேலும், மாணவரின் செயல் கடுமையானது என கருத்தாய்வில் பங்கேற்ற பெண்களில் முக்கால்வாசிப் பேர் அல்லது 76 விழுக்காட்டினர் கூறினர். ஆண்களில் 69 விழுக்காட்டினரும் அந்தக் கருத்தையே பிரதிபலித்தனர்.

தண்டனை விதிக்கப்பட்டது குறித்துப் பலரும் ஏமாற்றம் தெரிவித்திருப்பதைத் தாம் நன்கு உணர்ந்திருப்பதாகக் கூறிய அமைச்சர் டோங், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள உணர்வெழுச்சியைத் தாம் புரிந்திருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்றார் அவர்.

“அதே சமயம் இது போன்ற சம்பவங்களுக்கு ஏற்ற சட்டக் கொள்கைகள் என்னென்ன என்றும் இவை சமூக நற்பண்புகளோடு ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்வது எவ்வாறு என்றும் கேள்விகள் எழுப்ப நமக்கு உரிமை உண்டு,” என்றார் அவர்.

சில குற்றவாளிகளுக்கு, குறிப்பாக இளையோருக்கும் கடுமையான குற்றம் புரியாதோருக்கும் இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட திரு டோங், பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும் தண்டனைக் கட்டமைப்பின் மறுஆய்வின்போது உள்துறை அமைச்சும் சட்ட அமைச்சும் கவனத்தில் கொள்ளும் என்று தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!