அமைச்சர் சண்முகம்: பாலின சமத்துவத்தை இளம் பிள்ளைகளிடம் ஊக்குவிக்க வேண்டும்

பாலின சமத்துவம் என்பது குறிப்பிட்ட துறைகளில் உள்ள செயல்முறை அளவைத் தாண்டி இருப்பது முக்கியம் என்பது நமது உணர்வில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

“ஒவ்வோர் ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்கும் அவர்களின் சிறு வயதிலிருந்தே இரு பாலினங்களும் சமமாகவும் மதிப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

“அப்போதுதான் அந்த எண்ணம் அவர்களில் மனதில் ஆழமாகப் பதிந்து, பாலின வன்முறைக்கு எதிரான ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும்,” என்று ‘பெண்கள் மேம்பாட்டு கலந்துரையாடல்கள்’ எனும் தலைப்பில் இன்று நடைபெற்ற மெய்நிகர் கலந்துரையாடலில் திரு சண்முகம் கூறினார்.

“பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் என்பது நமக்கு நீண்டகாலமாகவே மிகவும் முக்கியமான அம்சமாக இருந்து வந்துள்ளது. அதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றில் சில இன்னும் செயலாக்கம் பெற்று வருகிறது.

“பாலின சமத்துவத்தை அடைய இன்னும் பல முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதை நாம் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்கு நமது கலாசார, பண்புநெறிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

பாலியல் வன்முறைக்கான தண்டனைகளையும் திரு சண்முகம் சுட்டினார்.

“அது ஒரு பெண்ணுக்கு எதிராக ஓர் ஆண் புரியும் குற்றம் என்று இனிமேல் எடுத்துக்கொள்ளப்படாது. ஒரு சாதாரண குற்றத்துக்கு விதிக்கப்படும் தண்டனையாக அது இருக்காது.

“மாறாக, அது அடிப்படை உணர்வுகளைக் காயப்படுத்திய பெரிய குற்றமாகவே கருதப்படும். அப்படி என்றால், அடிப்படை உணர்வுகளைக் காயப்படுத்திய அந்தக் குற்றம் விசாரணைக்கு வரும்போது, குற்றவாளி இளம் வயதுள்ளவர், அவர் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார் போன்ற விவாதங்கள் அவரது தண்டனைக் குறைப்புக்கு எந்த அளவுக்கும் உதவாது,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

“தொடர் குற்றங்களுக்கு தண்டனைகளைக் கடுமையாக்கிக்கொண்டிருக்கும்போது, சிறுவர்களைப் பாலியல் செயல்களுக்குத் தயார்ப்படுத்துதலும் அவர்களைப் பாலியல் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதும் தலைத்தூக்குகின்றன.

“இப்படிப்பட்ட சம்பவங்களை எதிர்நோக்கும்போது எந்த கண்ணோட்டத்தில் அணுகுவது, இதற்காக புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமா என்றெல்லாம் என்னை சிந்திக்க வைக்கிறது,” என்றும் திரு சண்முகம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!