கொவிட்-19 கொள்ளைநோய் சிங்கப்பூரைப் பாதிக்கத் தொடங்கி எட்டு மாதங்கள் கடந்தவிட்ட நிலையில் பாதுகாவல், தளவாட, துப்புரவு ஆகிய துறைகளில் இன்னும் மனிதவளப் பற்றாக்குறை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, பாதுகாவல் துறையில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் போன்ற சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாவல் அதிகாரிகளுக்கான பற்றாக்குறை அந்த வேலைகளுக்கு வழக்கப்படும் சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு விளம்பரத்தில், ‘பச்சை மண்டலம்’ அதாவது கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள பாதுகாவல் அதிகாரிகளுக்கு மாதம் $3,200 சம்பளம் வழங்க பாதுகாவல் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
பாதுகாவல் ஊழியர்கள் சங்கமும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடத்திய ஆய்வு ஒன்றில், பாதுகாவல் அதிகாரி ஒருவரின் சராசரி மாதாந்திர சம்பளம் $1,975 என்று கண்டறிந்தன.
“பாதுகாவல் அதிகாரிகளுக்கான சம்பள விகிதம் உயர்ந்து விட்டது. குறிப்பாக, ‘சிவப்பு மண்டலம்’ அதாவது கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து இன்னும் விடுபடாத ஊழியர்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாவல் அதிகாரிகளின் சம்பளம் அதிகரித்துள்ளது,” என்றார் சிங்கப்பூர் பாதுகாவல் சங்கத்தின் தலைவர் திரு ராஜ் ஜோஷுவா தாமஸ்.
“கிருமிப்பரவல் அதிகரித்தபோது, பாதுகாவல் அதிகாரிகளுக்கான தேவை 10% (5,000 வேலைகள்) முதல் 20% (10,000 வேலைகள்) வரை உயர்ந்தது. அவற்றில் பெரும்பாலானவை, உடல் வெப்பநிலை சோதித்தல், முன்களப் பணியாளர்கள் போன்ற துணைப் பணிகள்.
“இப்படிப்பட்ட வேலைகளை பாதுகாவல் அதிகாரிகளே தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டனர். கொவிட்-19 கிருமித்தொற்று நிலை மெதுவடையும்போது பாதுகாவல் வேலைகளுக்கான தேவையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது,” என்றும் திரு ராஜ் தெரிவித்தார்.
இதற்கிடையே, வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருந்த தளவாடம், துப்புரவுத் துறை களையும் மனிதவளப் பற்றாக்குறை பாதித்துள்ளது. துப்புரவுப் பணிகள் அதிகமாகி விட்டதால் அதனை ஈடுகட்ட அத்துறை ஊழியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று துப்புரவு நிறுவனங்கள் கூறுகின்றன.
“துப்புரவு வேலை தொடர்பான அதிகமான விளம்பரங்களை நாங்கள் வெளியிடுகிறோம். ஆனால், அந்த வேலைகளை ஏற்க சிங்கப்பூரர்கள் தயங்குகிறார்கள். இப்போது சிங்கப்பூர்-மலேசிய எல்லை மூடப்பட்டிருப்பதால், கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியாத நிலையில் உள்ளோம்,” என்றார் ஏ1 ஃபெசிலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் திரு பிரையன் கோ.