திருமணப் பதிவகம்: 23% குறைந்துள்ளன; வரும் மாதங்களில் அதிகமானோர் மணவாழ்வில் இணையலாம்

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தங்களின் திருமணத்திற்காக திட்டமிட்ட திரு தேவன், திருவாட்டி வனிதா இருவரிடமும் அதை ஒத்திவைக்குமாறு திருமணப் பதிவகம் கடைசி நிமிடத்தில் தெரிவித்தது. இவ்வாண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடக்கவிருந்த அவர்களின் பதிவுத் திருமணம், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் முறியடிப்புத் திட்டங்களால் தள்ளிப்போனது.

திருமணத் திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்த பல தம்பதிகளில் 34 வயது திரு தேவன் லக்‌ஷ்மணன், 31 வயது வனிதா ஜெயகுமார் ஆகியோரும் அடங்கினர். ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் தங்களின் பதிவுத் திருமணத்துடன் 250 பேருக்கான திருமண விருந்தையும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வர்த்தக மேம்பாட்டு நிர்வாகியாகப் பணிபுரியும் திரு லக்‌ஷ்மணன், “எங்களுக்கு கவலையாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்கான ஏற்பாட்டில் எங்களின் முழு ஈடுபாடும் இருந்தது,” என்றார்.

ஆனால் காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலை உருவாகிவிட்டது. அரசாங்கம் ஜூலை மாதத்தில் செய்த அறிவிப்பில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் திருமண விருந்தில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டது.

திரு லக்‌ஷ்மணனுக்கும் திருவாட்டி வனிதாவுக்கும் ஒரே குதூகலம். ஓர் ஓரமாக போட்டு வைத்திருந்த ஆடை ஆபரணங்களை எல்லாம் அவர்கள் மீண்டும் எடுத்தனர்.

இந்து ஜோதிட நாள்காட்டியின் படி செப்டம்பர் 6ஆம் தேதி சுபதினம். அன்று ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் இருவரும் தங்களின் சங்கமத்தைப் பதிவு செய்ததுடன் திருமணச் சடங்குகளையும் நிறைவேற்றினர். அந்த நிகழ்வில் 48 பேர் கலந்துகொண்டனர். எப்படியோ தங்களின் திருமணம் முடிந்ததில் மனநிறைவு கொள்வதாக திருவாட்டி வனிதா தெரிவித்தார்.

இருப்பினும் உறவினர்கள் பலரையும் நெருங்கிய நண்பர்கள் சிலரையும் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது.

இவர்களைப் போல ஆயிரக்கணக்கான தம்பதிகளின் திருமணத் திட்டங்களுக்குக் கொள்ளைநோய் தற்காலிகத் தடை விதித்தது. சென்ற ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 13,626 பதிவுத் திருமணங்கள் நடந்தன. ஆனால் இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் 23% குறைந்து 10,542 திருமணங்கள் மட்டுமே அதே காலகட்டத்தில் நடந்துள்ளன.

இருப்பினும் வரும் இறுதிக் காலாண்டில் அதிகமான திருமணங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக திருமணப் பதிவகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்பாக அக்டோபர் 10ஆம் தேதி பிரபலமான ஒரு நாளாக தற்போது இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அன்று மட்டும் குறைந்தது 800 பதிவுத் திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொவிட்-19 சூழல் இங்கு சற்று மேம்பட்டு வருவதால் தம்பதிகள் அடுத்த மூன்று மாதங்களில் கைப்பிடிக்க முடிவெடுத்திருக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!