ஊரடங்கு காலத்திலும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

1 mins read
bcc2dd72-3519-469b-93c0-bb858a1a1ed3
-

சென்னை: கொவிட்-19 கிருமித்தொற்றைத் துடைத்து ஒழிக்க ஊரடங்கு நடப்பில் இருந்த காலத்திலும் இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ஊரடங்கு காலகட்டத்தில், விபத்துகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள், சமூக மோதல்கள் குறைந்துள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இளம் பெண்களும் சிறுமிகளும் பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், வசிப்பிடங்கள், வாகனங்கள் போன்ற இடங்களில் வயது வித்தியாசமின்றி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பெரும்பாலும் பழக்கமானவர்கள்தான் அவர்களைப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகின்றனர்.

கடந்த ஜனவரி முதல் இப்போது வரை கோவையில் 47, ஈரோட்டில் 55, நீலகிரியில் 41, திருப்பூரில் 30, சேலத்தில் 34, நாமக்கல்லில் 32, தர்மபுரியில் 35, கிருஷ்ணகிரியில் 22 வழக்குகள் என மேற்கு மண்டலத்தில் மொத்தம் 296 'போக்சோ' வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

நவீன கைபேசிகள் பயன்பாடு அதிகரிப்பு, அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகைப்படங்களை பரிமாற்றம் செய்தல், ஆபாச காணொளிகளைப் பார்த்தல் போன்றவற்றின் விளைவாக பாலியல் ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும்; புகார் பெட்டி வைக்க வேண்டும்; இளம் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என்று ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.