எரிசக்தி, தண்ணீர், கழிவு சுற்றுப்புறச் சேவைகள் போன்ற துறைகளில் வேலை பார்க்கும் அத்தியாவசிய ஊழியர்களுக்கு ரொக்கமாக $200 கிடைக்கும். அந்த ஊழியர்கள், சிங்கப்பூரில் கொவிட்-19 சூழலில் எல்லாம் செவ்வனே நடந்துவர உதவி இருக்கிறார்கள் என்றும் அதைப் போற்றி அங்கீகரித்து பாராட்டும் வகையில் இந்தப் பண உதவி கொடுக்கப்படுவதாகவும் செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்தது.
என்டியுசியுடன் சேர்ந்து, தகுதி பெறும் ஏறக்குறைய 2,500 தொழிற்சங்க ஊழியர்களுக்கு மொத்தம் $500,000 தொகையை செம்ப்கார்ப் கொடுக்கும்.
இந்நிறுவனம் தொடக்கமாக $1.5 மில்லியன் தொகையுடன் ‘செம்ப்கார்ப் நற்செயல் தெம்பு நிதி’ என்ற புதிய நிதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் குழுத் தலைவரும் தலைமை நிர்வாகியுமான வோங் கிம் யின் இந்த விவரங்களை அறிக்கையில் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்கள், அறப்பணி அமைப்புகள், அத்தியாவசிய சேவை ஊழியர்கள் ஆகியோருக்கு உதவி செய்வது இதன் நோக்கம். இந்த நிதியில் இருந்து ஒரு பகுதி எடுக்கப்பட்டு அவசிய சேவைத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும்.
இந்த நிதி, சிறிய அறப்பணி அமைப்புகளின் நடைமுறைச் செலவை ஈடுசெய்யும் வகையில் அவற்றுக்கு நிதி அளிக்கும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார். அதேபோல் நாடு சரளமாகச் செயல்பட உதவி இருக்கும் ஊழியர்களையும் அங்கீகரித்து அவர்களுக்கு உதவவும் நிறுவனம் விரும்புவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் சமூக அறநிறுவன அமைப்புடன் சேர்ந்து தலா $10,000 என்ற கணக்கில், மொத்தம் $350,000 தொகையை 35 அறப்பணி அமைப்புகளுக்கு செம்ப்கார்ப் கொடுக்கும்.
இவை ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் உறவாடி மகிழும் வகையில் ஏறக்குறைய 20,000 பேரின் கைபேசியில் செம்ப்கார்ப் $10 பணம் போடும்.
புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் நிதியில் இந்நிறுவன ஊழியர்கள் கொடுத்த ஒவ்வொரு வெள்ளிக்கும் தானும் ஒரு வெள்ளியை இந்த நிறுவனம் சேர்த்துள்ளது. இப்படி மொத்தம் $100,000 சேர்ப்பது இலக்கு. இந்தத் தொகை, கொவிட்-19 காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு உதவுவதற்காக கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் சமூக அறநிறுவன சாயாங் சாயாங் நிதியில் சேர்க்கப்படும்.
அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், அதே வேளையில் மக்களுக்கும் சமூகத்துக்கும் நல்லவற்றைச் செய்ய விழைகிறது என்றும் திரு வோங் கூறினார்.
இதனிடையே, செம்ப்கார்ப் நீட்டும் உதவிக்கரம் சரியான நேரத்தில் இடம்பெறும் ஒன்றாக இருக்கிறது என்று சமூக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகியான திருவாட்டி கேத்தரின் லோ கூறினார்