இரண்டு பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு அபராதம்

இரண்டு பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு அபராதம்

2 mins read
df4fdc62-8b4f-4ddc-8468-72e2569589b5
வாரிங் (இடது), ஒலாசன்கன்மிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிருமி முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது ராபர்ட்சன் கீயில் நண்பர்களுடன் ஒன்றுகூடிய இருவருக்கு நேற்று நீதிமன்றம் அபராதம் விதித்தது.

பிரிட்டனைச் சேர்ந்தவர்களான 35 வயது ஆல்ஃபிரட் ஜோன் வெலோசோ வாரிங், 31 வயது டேனியல் ஒலாலெகன் ஒலாசன்கன்மி ஆகிய இருவர் மீதும் கிருமி முறியறிப்புத் திட்டத்தை மீறியதன் தொடர்பில் குற்றச்சாட்டு பதிவானது.

அதையடுத்து ஒலாசன்கன்மிக்கு $8,500 மற்றும் வாரிங்க்கு $8,000 அபராதத் தொகைகள் விதிக்கப்பட்டன.

இருவரும் வேலை அனுமதி அட்டை உடையவர்களா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்க நடவடிக்கைகள் நடப்பில் இருந்த காலகட்டத்தில் இவ்வாண்டு மே 16ஆம் தேதியன்று இருவரும் லிமோன்செல்லோ@ராபர்ட்சன் கீ உணவகத்தில் சந்தித்துக்கொண்டனர்.

அதற்குமுன் மாது ஒருவரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஒலாசன்கன்மி பானம் வாங்கச் சென்றுவிட்டார். மீண்டும் பானங்கள் தாங்கிய ஒரு நெகிழிப் பையுடன் அவர் வந்து மாது அருகே உட்கார்ந்தார். அப்போது பிள்ளை வைத்திருந்த இன்னொரு மாது அவர்களுடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.

சிறிது நேரம் கழித்து வாரிங் அவ்விடத்திற்கு வந்து கும்பலுடன் சேர்ந்துகொண்டார். பின் இரு ஆண்களும் அங்கிருந்து சென்று மதுபானமும் தண்ணீரும் வாங்கிவிட்டு மீண்டும் திரும்பினர். இப்படியே அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாகச் செய்தனர். அதையடுத்து பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் கும்பலை அணுகினர். கும்பலாக வந்தோர் தங்களின் முகக்கவசங்களை கீழிறக்கியே வைத்திருந்தனர் அல்லது அணியவே இல்லை என்பதைத் தூதர்கள் கவனித்தனர்.

இரு பிரிட்டிஷ் ஆடவர்களும் ஒரே இடத்தில் இருந்தபோதும் அங்கு நிலவிய சந்திப்பு வெகுநேரம் பிடித்ததாகவும் அவர்கள் பொது இடத்தில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறும் வகையில் நடந்துகொண்டதாகவும் அரசுத் தரப்பு வாதிட்டது.

இந்நிலையில் அபராதத்தைக் கட்டத் தவறினால் இருவரும் சிறைக்கு அனுப்பப்படுவர் என்று நீதிபதி தெரிவித்தார்.