லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண்ணின் பாவாடைக்குள் படம் எடுத்ததாக சந்தேகித்து அவ்வாறு செய்தவரைத் துரத்திப் பிடித்துச் சிலர் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் ஆடவர் மரணமடைந்தார்.
இந்நிலையில், தடுத்து வைத்தவர்கள் அதிக பலத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் ஆடவருக்கு நேர்ந்தது நோய் காரணத்தால் விளைந்த மரணம் என்றும் மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் நேற்று கூறினார்.
பெண்ணின் பாவாடைக்குள் திரு ஆண்ட்ரு ஹோ சீ மெங் (46) படம் எடுப்பதைக் கவனித்த திரு இங் கிம் டோங், இன்னும் இருவரான திரு நர்டோஸி தியரி, திரு ருடி இஸ்கந்தர் கானுடன் துரத்தத் தொடங்கினார். நிவன் ரோட்டில் மூவரும் திரு ஹோவைப் பிடித்து வைத்திருந்தனர்.
திரு ஹோவின் கைகால்களைப் பிடித்தபடி திரு நர்டோஸி கைபேசியை எடுத்துக்கொண்டார். பின்னர் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட 47 படங்கள் அதில் இருந்தன.
மேலும் இருவர் முன்வந்து திரு ஹோவைத் தடுத்து வைத்திட உதவினர். ஆனால் போலிஸ் வந்தபோது திரு ஹோ பேச்சுமூச்சின்றிக் கிடந்தார்.
அவர் உயிரிழந்துவிட்டார் என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
இதய தசை தொடர்பான நோய் திரு ஹோவுக்கு இருந்ததாகவும் ஓடியதில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு மரணமடையக் காரணமாக இருக்கும் என்றும் பிரேதப் பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர் தெரிவித்திருந்தார்.

