போட்டித்தன்மையைச் சமாளிக்க மின்னிலக்கமயமாதலே சிறந்த வழி:அமைச்சர் சான்

சிங்கப்பூர் தனது பொருளியலை உருமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வர்த்தக மையம் என்ற அதன் அந்தஸ்தை அது இழக்கக்கூடும். அதனால் வர்த்தகங்கள் மற்றும் ஊழியர்களின் போட்டித்தன்மை சரியக்கூடும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முன்பிருந்த காலத்துக்கு திரும்பி விடலாம் என்று நிறுவனங்கள் நினைப்பது தவறு என்று குறிப்பிட்ட அமைச்சர் சான், மின்னிலக்க உருமாற்றமே சிங்கப்பூர் செழிப்படைய முக்கிய காரணமாக இருக்கிறது என்றார்.

வர்த்தக செயல்முறையை மறுவடிமைக்க வேண்டும், புதிய பொருளியலை வளர்த்து, வர்த்தகங்களுக்கும் மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று எதிர்கால பொருளியல் மாநாட்டில் நேற்று பேசியபோது திரு சான் இவ்வாறு கூறினார்.

“மின்னிலக்க உருமாற்றம் உலகச் சந்தையில் நமது நிலையை வலுவாக்கும். ஆனால், அதை சரியான நேரத்தில் செயற்படுத்த வேண்டும். நமது வர்த்தகத்தில் மின்னிலக்கத்துக்கு ஒரு முக்கிய பங்கை கொடுக்க வேண்டும்.

“அப்போதுதான் அது நமது பொருளியல் மீட்சிக்குப் புத்துணர்ச்சி அளித்து, நமது போட்டித்தன்மையையும் உலக அரங்கில் நமது முக்கியத்துவத்தையும் நிலைநாட்டும்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் 1,000க்கு மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் மெய்நிகர் வழி பங்கேற்கின்றனர்.

புதிய வழக்கத்துக்கு ஏற்ப வர்த்தகங்கள், தரவு பகுப்பாய்வு போன்ற மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தி எப்படி தங்களை மறுநிர்மாணம் செய்துகொள்ளலாம் என்று இம்மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும்.

யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, ‘பெய்பால்’ இணையக் கட்டண நிறுவனம், நிபுணத்துவ சேவைகள் வழங்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசும் 19 பேரில் அடங்குவர்.

இந்த மெய்நிகர் கூட்டத்தில், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தங்களுக்கிடையிலான உடன்பாட்டைப் புதுப்பித்துக்கொள்ளும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இவ்விரு அமைப்புகளும் சேர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் வர்த்தக சமூகத்தில் மின்னிலக்க உருமாற்றத்தை தீவிரமாகச் செயல்படுத்தும். அத்துடன் மின்னிலக்கம் தொடர்பான வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள நிறுவனங்களை ஊக்கப்படுத்தும்.

“கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் மின்னிலக்கமயமாதலின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. மின்னிலக்கமயமாதலுக்கு மாறுவதிலும் சவால்கள் உள்ளன. ஆனால், அதையே காரணங்காட்டி, அரசாங்க அமைப்புகள், வர்த்தகங்கள், தனிநபர்கள் அந்த முயற்சியிலிருந்து விலகியிருத்தல் நன்மை பயக்காது.

“மின்னிலக்கமயமாதலானாலும் உலகமயமாதலானாலும், அதில் தனிநபர்களும் வர்த்தகங்களும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப முன்னேறிச் செல்ல வேண்டும். அப்படி செய்யாதவர்கள் வர்த்தகப் போட்டித்தன்மையில் பின்தங்கிவிடக்கூடும்,” என்றும் திரு சான் வலியுறுத்தினார்.

“மின்னிலக்கமயமாதலை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ‘எஸ்எம்இ கோடிஜிட்டல்’ எனும் திட்டம் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுகிறது.

“நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்த டிஜிட்டல் ரிசிலியன்ஸ் போனஸ் எனும் நிதி ஊக்குவிப்புத் திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

“மேலும் மின்னிலக்கமயமாதல் முறைக்கு புதியவர்களான நிறுவனங்களுக்கு உதவ 1,000 மின்னிலக்கத் தூதர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்,” என்றும் அமைச்சர் சான் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!