தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையும் கலைகள், சமூக அறிவியல் துறையும் இணைக்கப்படுகின்றன

1 mins read
791d01ba-0341-45b8-bbab-b72c05bff925
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலைகள், சமூக அறிவியல் துறையும் அறிவியல் துறையும் ஒன்றாக இணைக்கப்பட்டு, புதிய பலதுறை கல்லூரியாக உருவெடுக்கவுள்ளது.

கடந்த கல்வியாண்டில் 6,404 மாணவர்களைக் கொண்ட ஆகப் பெரிய துறையான கலைகள், சமூக அறிவியல் துறையும் அறிவியல் துறையும் புதிதாக இணைந்து 'மானுடவியல் அறிவியல் துறை கல்லூரி' என பெயர் காண்கிறது.

இந்த இரு துறைகளும் பல்கலைக்கழகத்தின் கென்ட்ரிட்ஜ் வளாகத்தில் அமைந்திருக்கும். இவ்விருதுறைகளில் தற்போது தலைவர்களாக உள்ள பேராசிரியர் ரோபி கோவும் பேராசிரியர் சன் யெனெங்கும் புதிய கல்லூரியின் இணைத் தலைவர்களாகச் செயல்படுவர்.

தேசிய பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் இச்செய்தியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினார். "முன்மொழியப்பட்ட புதிய மானுடவியல் அறிவியல் துறை கல்லூரிக்கான பணி வரைவுத்திட்டம் இன்னும் ஆலோசனைக் கட்டத்தில் உள்ளது," என்றார் அவர்.

தனிப்பட்ட பாடங்களின் அடிப்படையில் நிபுணத்துவம் பெறுவதில் இருந்து துறைகளுக்கிடையிலான கற்றல், ஆய்வு முறைக்கு பல்கலைக்கழகம் மாற வேண்டிய காலம் வந்துவிட்டதாக தேசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் டான் எங் சாய் இந்த மாதம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் எழுதிய ஒரு கட்டுரையை தொடர்ந்து, இத்துறைகளின் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பணி வரைவுத்திட்டத்தின் அடிப்படையில் ஆலோசனைகள் தொடங்கின.