பணிப்பெண் துன்புறுத்தல்: தண்டனைக் காலம் நீட்டிக்கப்பட்டது

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய குற்றத்துக்காக 48 வயது சுசேனா போங் சிம் சுவானுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 மாத சிறைத் தண்டனை கடந்த ஆண்டு எட்டு மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. ஆனால் போங்கின் தண்டனைக் காலத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று 14 மாதங்களுக்கு உயர்த்தியது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று பணிப்பெண்ணான திருவாட்டி தன் தன் சோவின் இடது கன்னத்தில் தைலப் புட்டியைப் பயன்படுத்தி போங் தொடர்ச்சியாக அடித்தது உறுதி செய்யப்பட்டது.

மியன்மாரைச் சேர்ந்த அந்த பணிப்பெண்ணைபோங் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவாட்டி சோவின் கண் அல்லது முகத்தில் போங் குத்துவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு வந்து பத்து மாதங்களில் திருவாட்டி சோவின் கண்பார்வை மோசமடையத் தொடங்கியது.

இந்நிலையில், கண்ணாடிப் புட்டியைப் பயன்படுத்தி போங் தம்மைத் தாக்கியதை அடுத்து, போலிசாருடன் திருவாட்டி சோ தொடர்புகொண்டார்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவச் சோதனையில் இடது கண்ணில் அவர் பார்வையிழந்துவிட்டது தெரியவந்தது.

2018ஆம் ஆண்டில் போங்கிற்கு 20 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு $38,540.40 இழப்பீடு வழங்க போங்கிற்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் போங் மேல்முறையீடு செய்தார். அவரது தண்டனைக் காலத்தை உயர் நீதிமன்றம் எட்டு மாதங்களுக்குக் குறைத்தது.

பணிப்பெண்ணுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை $1,000ஆக குறைக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று போங்கின் செயல்களால்தான் திருவாட்டி சோ காயமடைந்தார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீதிபதி சுவா லீ மிங் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். போங்கின் தண்டனைக் காலத்தைக் குறைத்தபோது அதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் தவறானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது.

பணிப்பெண்ணை போங் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் போங்கின் தண்டனைக் காலத்தை 14 மாதங்களுக்கு உயர்த்தியது.

இம்மாதம் 30ஆம் தேதியன்று போங்கின் சிறைத் தண்டனை தொடங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!