சுடச் சுடச் செய்திகள்

மேயர்களின் பதவியேற்புச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் லீ: சமூக மேம்பாட்டு மன்றங்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவு

கொவிட்-19 சூழலில் சிங்கப்பூரர்களுக்கு உதவ இவ்வாண்டு பிப்ரவரி, ஜூன் மாதங்களுக்கு இடையே சிங்கப்பூரில் உள்ள ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களும் 70க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தின. அவற்றில் மாணவர்களுக்கான உணவுத் திட்டமும் 400,000 குடும்பங்களுக்கான $20 மில்லியன் பற்றுச்சீட்டுத் திட்டமும் அடங்கும்.

“நடுத்தர வருவாய் குடும்பங்கள் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க இந்தப் பற்றுச்சீட்டுத் திட்டம் கைகொடுக்கிறது. அக்கம்பக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் உள்ள உணவங்காடி நிலையங்கள் மற்றும் சிறிய வர்த்தகங்களில் அப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்,” என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

“சமூக மேம்பாட்டு மன்றங்கள் மேற்கொள்ளும் பணிகள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. அவை அமைதியாக செயல்படும் அதேவேளையில் அவற்றின் இலக்கை எட்ட உறுதியாக உள்ளன. நெருக்கடி காலகட்டத்தில், அவற்றின் பங்களிப்பு மேலும் முக்கியமானதாக உள்ளது,” என்று அவர் சொன்னார்.

மக்கள் கழக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஐந்து மேயர்களின் பதவியேற்புச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ இதனைத் தெரிவித்தார். வர்த்தக, தொழில் அமைச்சரும் மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான திரு சான் சுன் சிங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

“சமூக ஆதரவுக் கட்டமைப்பை நாங்கள் எவ்வாறு சீரமைத்துள்ளோம் என்பதைச் சமூக மேம்பாட்டு மன்றங்கள் காட்டுகின்றன. குடியிருப்பாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பாலமாக அவை செயல்படுகின்றன. சமூகத்திற்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவதுடன் மாறிவரும் தேவைகளையும் அவை அடையாளம் காணுகின்றன,” என்றார் பிரதமர் லீ.

குடியிருப்பாளர் ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது அவர் சமூக மேம்பாட்டு மன்றத்தை அணுகலாம். அவருக்கு மன்றம் உதவி வழங்கும் அல்லது வேறெந்த அமைப்பிடம் உதவி நாடலாம் என்பதை மன்றம் அவருக்கு வழிகாட்டும். சமூக மேம்பாட்டு மன்றங்களின் பணிகளை அரசாங்கம் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறிய திரு லீ, அதனால்தான் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அவற்றுக்கு கூடுதலாக $75 மில்லியன் மானியத்தை அரசாங்கம் வழங்கியதைச் சுட்டினார்.

நேற்று மூவர் மேயர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டனர். திருமதி டெனிஸ் புவா, திருமதி லோ யென் லிங், திரு டெஸ்மண்ட் சூ ஆகியோர் அவர்கள். மேயர் குழுத் தலைவராக திருமதி லோ தொடர்ந்து இருப்பார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹ்மி அலிமான், தென்கிழக்கு மாவட்ட மேயராக உள்ளார்.

மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம், வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயராக உள்ளார்.

பிரதமர் அலுவலகம் இந்தப் புதிய நியமனங்களை கடந்த ஜூலை இறுதியில் அறிவித்திருந்தது. மேற்கூறப்பட்டவர்கள் ஜூலை 27ஆம் தேதி மேயர்களாக தங்களது பணியைத் தொடங்கினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon