ஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை

கொரோனா நெருக்கடி நிலையின் காரணத்தால் பங்குச் சந்தைகளின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் பலரது முதலீட்டு மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் முதலீட்டாளர்களில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் முதலீடுகளை மீட்டுக்கொள்ளவில்லை என்று அனைத்துலக நிர்வாக நிறுவனமான ‘ஃபிடேலிட்டி இன்டர்நேஷனல்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 29ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2,434 முதலீட்டாளர்கள் ஆய்வில் பங்கேற்றனர். நான்கு நாடுகளின் பங்குச் சந்தைகளில் அனைத்து முதலீடுகளும் கொரோனாவால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. கொவிட்-19 சூழலில் தங்கள் முதலீடுகளின் மதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகக் கூறிய முதலீட்டாளர்களில், சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளர்களே அதிகம்.

இருப்பினும், ஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூர் முதலீட்டாளர்களில் 86 விழுக்காட்டினர் தங்கள் முதலீடுகளைத் தொடர்வதாகக் கூறினர். இது ஆய்வில் பங்கெடுத்த மற்ற நாடுகளின் முதலீட்டாளர்களைவிட அதிகம்.

ஆய்வில் பங்கெடுத்த அனைத்து நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களில் 82 விழுக்காட்டினர் தங்கள் முதலீடுகளைத் தொடர்கின்றனர்.

கொள்ளைநோய் தொடங்கியதிலிருந்து பத்தில் நான்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் தங்கள் முதலீட்டுத் தொகையை உயர்த்தியுள்ளனர்.

ஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூர் முதலீட்டாளர்களில் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே கொரோனா கிருமித்தொற்று தொடங்கியதை அடுத்து தங்கள் முதலீட்டுத் தொகை அனைத்தையும் மீட்டுக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட எட்டு விழுக்காட்டினர் முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதியை மீட்டுக்கொண்டனர்.

ஆய்வில் பங்கெடுத்த மற்ற நாடுகளின் முதலீட்டாளர்களைவிட சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்குத்தான் பணம் தொடர்பான கவலை அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நெருக்கடி தொடங்கியதிலிருந்து பணம் தொடர்பான கவலை அதிகரித்திருப்பதாக மூன்றில் இரண்டு சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூறினர்.

இந்நிலையில், நான்கில் ஒரு சிங்கப்பூர் முதலீட்டாளர் தமது ஓய்வுகாலத்தைம் தள்ளிப்போட இருப்பதாகவும் முழுநேர வேலையை நீட்டிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். ஐந்தில் ஒரு சிங்கப்பூர் முதலீட்டாளர் கூடுதல் காலத்துக்குப் பகுதிநேர வேலை செய்து படிப்படியாக ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!