குப்பைகளைப் புதையலாக்கும் முயற்சியாக, நிலத்தை நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்படும் குப்பைகளை மறுபயனீடு செய்வது குறித்து தேசிய சுற்றுப்புற வாரியம் ஆராய்ந்து வருகிறது.
இதன்மூலம், விரைவாக நிரம்பி வரும் செமக்காவ் குப்பை நிரப்பும் நிலத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்.
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் குப்பை நிரப்பப்படும் ஒரே பகுதியாக செமக்காவ் விளங்கி வருகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிடில் 2035ஆம் ஆண்டுவாக்கில் அங்கு மேலும் குப்பைகளை நிரப்ப இடமில்லாமல் போய்விடும் என்று ஓர் அறிக்கை வாயிலாக வாரியம் நேற்று தெரிவித்தது.
செமக்காவ் குப்பை நிரப்பும் நிலத்தின் ஆயுளை மேலும் நீட்டிப்பது எப்படி, கடலோரப் பகுதியில் இன்னொரு குப்பை நிரப்பும் நிலத்தை அமைக்காமல் தவிர்ப்பது எவ்வாறு ஆகியவை பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அதே வேளையில் 'கழிவுகளற்ற' சுழற்சிப் பொருளியலை ஊக்குவிக்கவும் வாரியம் விரும்புகிறது. அதற்கு ஏதுவாக, நிலத்தில் நிரப்பப்பட்ட குப்பைகளில் இருந்து மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களை மீட்பதற்கான தொழில்நுட்பச் சாத்தியம் குறித்து ஆராய வாரியம் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
நிலத்தில் நிரப்பப்பட்ட குப்பைகளில், எரியூட்டு ஆலைகளில் எஞ்சும் கரித்துகள், சாம்பல், பிற ஆலைகளில் இருந்து வரும் எரியூட்டப்படாத கழிவுகள் ஆகியவை இருக்கும்.
இப்போதைக்கு, எரியூட்டு ஆலைச் சாம்பல் மற்றும் திடக் கழிவுகளின் கசடுகளைக் கொண்டு 'நியூசேண்ட்' உருவாக்கப்படுகிறது. கான்கிரீட் மேசைகள் அமைக்கவும் தெம்பனிஸ் நகரில் உள்ள ஒரு நடைபாதையை அமைக்கவும் வாரியத்தின் சுற்றுச்சூழல் கட்டடத்திற்கு முன்னால் இருக்கும் புதிய கான்கிரீட் பிளாசா அமைக்கவும் அந்த 'நியூசேண்ட்' பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய திட்டம் மூலமாக, செமக்காவ் குப்பை நிரப்பும் நிலத்தின் ஆயுளை நீட்டிப்பதற்காகப் புத்தாக்கமிக்க, புதுமையான தீர்வுகளை ஆராயவும் கழிவுகளற்ற நாடாக சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லவும் வாரியம் ஆர்வமாக உள்ளது.
நிலத்தில் நிரப்பப்பட்டு வெகுநாளான குப்பைகளின் இயற்பியல், வேதிப் பண்புகள் பற்றி அறிய அத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
நிலத்தில் நிரப்பப்பட்ட குப்பைகளைத் திரும்ப எடுத்து, அவற்றை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப, பொருளியல் சாத்தியங்கள் குறித்து அத்திட்டம் மதிப்பிடும். எடுத்துக்காட்டாக, அவற்றை மண்ணாகப் பயன்படுத்துவதன் மூலம் குப்பைகளை நிரப்புவதற்கான நிலம் திரும்ப கிடைக்கும்.
"புதிய, எதிர்காலப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில், நிலத்தில் நிரப்பப்பட்ட குப்பைகளைப் புதையலாக மாற்றும் வகையில் பாதுகாப்பான, நீடித்து நிலைக்கத்தக்க தீர்வுகளை உருவாக்கும் பல்வேறு ஆய்வு, உருவாக்க முயற்சிகளை வாரியம் முன்னெடுத்து வருகிறது," என்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் மெங் டுய் தெரிவித்தார்.

