கொவிட்-19: கட்டுப்பாடு அகன்றாலும் முன்னெச்சரிக்கை முக்கியம் முரசொலி

கொவிட்-19 கிருமித்தொற்று உலகில் இன்னமும் தலைவிரித்தாடியே வருகிறது. ஆனால் சிங்கப்பூரில் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவுக்கு நிலவரங்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு வார காலத்தைப் பார்க்கையில் சமூக அளவில் கிருமி தொற்றுக்கு ஆளாவோரின் அன்றாட எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்று ஆகவே இருந்து வருகிறது. அதேவேளையில், அதிகம் தொற்று காணப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் நில வரங்கள் எவ்வளவோ மேம்பட்டு வருகின்றன. அங்கு புதிதாக கிருமிப் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சரசரவென குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், சிங்கப்பூர் கடைசி கட்டமாக பொருளியலை மேலும் திறந்துவிடலாம் என்பது பொருத்தமான உரிய ஒரு செயலாகத்தான் தெரிய வருகிறது. இப்படி கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதால் நிறுவனங்கள் வழக்கநிலைக்குத் திரும்பும் சூழ்நிலை ஏற்படலாம். சமூக நடவடிக்கைகளும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்க இடமுண்டு.

இப்போதைய நிலவரத்தைவிட இன்னும் அதிக ஊழியர்கள் இந்த வாரம் முதல் அலுவலகத்திற்குத் திரும்புவார்கள். வழிபாட்டு இடங்களிலும் திருமணங்களிலும் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கிடைக்கும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூத்த நிர்வாகிகள் அத்தியாவசியப் பயணங்கள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஏற்பாடுகள் எல்லாம் நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் ஓரளவுக்கு நிம்மதி தருபவையாக இருக்கலாம். கொவிட்-19க்கு முன்பு இருந்த சூழ்நிலையை அதற்குள்ளாக முற்றிலும் எதிர்பார்க்க இயலாது என்றாலும் கட்டுப்பாடுகள் அகல அகல நமக்கு நிம்மதிப் பெருமூச்சு வருகிறது. ஆர்வம் கூடுகிறது.

ஆனாலும் இவற்றோடு புதிய ஆபத்துகள் தலை எடுக்கின்றன என்பதை நினைவில் கொண்டு அவற்றைத் திறம்பட சமாளித்து ஆக வேண்டிய மிக முக்கிய பொறுப்பு உள்ளது என்பதை இந்தக் காலகட்டத்தில் எல்லாரும் உணரவேண்டும். உரிய, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை என்றால் சமூக அளவில் கொவிட்-19 மீண்டும் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நிராகரிப்பதற்கில்லை.

நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பல கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும். அவற்றுக்குப் புதிய நெறிமுறைகள் வழிகாட்டும். ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் பாதி வேலையை வீட்டிலிருந்தே பாரக்க வேண்டும் என்பது தொடர்ந்து நியதியாக இருந்து வரும். இந்தக் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்கள், முதிய ஊழியர்களையும் மருத்துவப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஊழியர்களையும் பொறுத்தவரையில் இன்னும் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

வேலை இடங்களில் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக இடம்பெறவேண்டும். முகக்கவசங்கள், உடல் வெப்பநிலை பரிசோதனை, முறையாக அடிக்கடி இடங்களை கிருமிநாசினி அடித்து சுத்தப்படுத்துவது, ஊழியர்களுக்கு இடையில் தடுப்புகளை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பு இடைவெளியை நூற்றுக்குநூறு கடைப்பிடிப்பது போன்ற காரியங்களில் எல்லாம் நிறுவனங்கள் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தும்போது சமூக இடைவெளி மிக முக்கியம் என்பதை அவை மறந்துவிடக் கூடாது. ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக ஓரிடத்தில் திரண்டு வேலை செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஊழியர் வேலைக்கு வரும் நேரத்தில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம். அதேபோல, வழிபாட்டு இடங்களிலும் திருமணங்களிலும் ஏற்பாட்டாளர்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க முடியும்.

சிங்கப்பூரில் இதுவரை கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு வரும்போதெல்லாம் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் சாதகமாகவே இருந்து வருகின்றன. அதேபோலவே இப்போதும் நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்ப இடமிருக்கிறது. இருந்தாலும் பல வெளிநாடுகள் சந்திக்கும் அனுபவங்கள் இதில் நமக்கு பல எச்சரிக்கைகளை விடுக்கின்றன.

கொவிட்-19 கிருமியைப் பொறுத்தவரை அது மற்ற கிருமிகளைப் போல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று.

சுத்தமாக முடங்கிவிட்ட சூழ்நிலையிலும் மறுபடியும் வேகமாக தலைதூக்கக்கூடிய ஆற்றல் அந்தக் கிருமியிடம் உண்டு. ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், இஸ்ரேல், வியட்னாம், ஆஸ்திரேலியா ஆகியவற்றில் இதற்கு உறுதியான சாட்சியங்கள் உண்டு.

அதேபோலவே, ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் மறுபடியும் கிருமிப் பரவல் ஆபத்தை சந்தித்து வருகின்றன.

அங்கெல்லாம் பலவார காலமாக ஒடுங்கிப்போன கிருமி மறுபடியும் கிடுகிடுவென தலைதூக்கி பெரும் மிரட்டலாக உருவெடுத்துள்ளதைக் காண முடிகிறது. கட்டுப்பாடுகளை மக்கள் உறுதியாகக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்ததே இதற்கான காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஹாங்காங் போன்றவற்றில் முன்னதாகவே எல்லைகள் திறந்துவிடப்பட்டதும் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டதும் மீண்டும் கிருமி தலைதூக்குவதற்கான காரணங்களாக இருந்து உள்ளன என்பதையும் நினைவில் கொள்வோம்.

எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், சிங்கப்பூரில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் ஒரு சூழலில் நாம் முன்னிலும் அதிக விழிப்புடன், முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து நடந்து வரவேண்டும் என்பது இன்றியமையாதது என்பதை உணர வேண்டும்.

கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கொவிட்-19 கிருமி ஒருபோதும் தவறாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இருந்தாலும் பொருத்தமான, சரியான முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டால் விரும்பும் பலனை வெகு விரைவில் நாம் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பது திண்ணம்.

இதைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளின் அனுபவம் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மிக முக்கிய ஒன்றாக இருக்கும் என்பதும் உறுதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!