மெய்நிகர் உடற்பயிற்சித் திட்டம்: 400 தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவு

1 mins read
dcd41e71-f369-4e5e-89f9-1352ae641ad0
-

கொரோனா நெருக்கடிநிலை காரணமாக தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்குக் கல்லூரியால் அதன் வழக்கமான உடற்பயிற்சிகளை நடத்த முடியவில்லை. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க அதன் மாணவர்களையும் ஊழியர்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் அப்பள்ளியின் உடற்பயிற்சிக் கல்வித் துறை மெய்நிகர் உடற்பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. அதன்படி, டிக்டோக் சமூக வலைத்தளம் வாயிலாக மெய்நிகர் உடற்பயிற்சித் திட்டங்களும் உடற்பயிற்சி சவால்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மெய்நிகர் ஓட்டப் போட்டியில் 17.5 கிலோமீட்டர் பிரிவில் தனது மாணவர்களும் ஊழியர்களும் பங்கெடுக்க வேண்டும் என்று அப்பள்ளியின் உடற்பயிற்சிக் கல்வி துறை முடிவெடுத்துள்ளது, அடுத்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை இந்த மெய்நிகர் ஓட்டப் போட்டியில் அப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவர்களும் 87 ஊழியர்களும் பங்கெடுப்பர்.

"மெய்நிகர் ஓட்டப் போட்டியில் மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பங்கெடுக்கலாம். இது பாதுகாப்பானது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 17.5 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் முடிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாக இந்தப் போட்டியில் பங்கெடுக்கிறோம். இதனால் மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்," என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்குக் கல்லூரியைச் சேர்ந்த உடற்பயிற்சிக் கல்வி விரிவுரையாளர் திரு மார்க் டேனியல் கோவின், 34, தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் அதன் சொந்த மெய்நிகர் ஓட்டப் போட்டியை நடத்தவும் தொழில்நுட்பக் கல்விக் கழகம் திட்டமிட்டுள்ளது.