சுடச் சுடச் செய்திகள்

ஏப்ரல், மே மாதங்களில் பேருந்து, ரயிலை குறைவானோர் பயன்படுத்தினர்; பயணிகள் மனநிறைவு

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய பயணிகள் மனநிறைவு அடைந்ததாக அண்மைய ஆய்வில் தெரியவந்து உள்ளது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) இணையம்வழி நடத்திய அந்த ஆய்வில் ஏறத்தாழ 7,500 பேர் பங்கேற்றனர். இவ்வாண்டு மே, ஜூலை மாதங்களுக்கு இடையில் பயணிகள் அதிக திருப்தி அடைந்ததாக ஆய்வு காட்டியது.

கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் எம்ஆர்டி கட்டமைப்பு 66.1 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் இவ்வாண்டு அது 73.4 புள்ளிகளைப் பெற்றது.

இவ்வாண்டு மே முதல் ஜூலை வரை பொதுப் பேருந்துகளில் பயணிகளின் திருப்தி நிலை 74.4 விழுக்காடாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 68.9 விழுக்காடாக இருந்தது.

என்றாலும், நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வந்த பிறகு ஜூன், ஜூலையில் பதிவான புள்ளிகள் கடந்த ஆண்டு பதிவான நிலைக்குத் திரும்பின.

ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்ட எஸ்எம்யு உன்னத சேவைக் கழகத்தின் ஆய்வு, ஆலோசனைப் பிரிவுத் தலைவர் சென் யோங் சாங், தற்போது கூடுதலானோர் வேலைக்குத் திரும்பும் நிலையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளதாகச் சொன்னார்.

“ரயில்கள், பேருந்துகளின் சேவைகளை அடிக்கடி விடும்படி சிலர் கோருகின்றனர். அதுபோக, பொதுப் போக்குவரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

“பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என்பதால் பொதுப் போக்குவரத்து நடத்துநர்களால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்பு உள்ளது. எனவே, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் போன்ற நடைமுறைகளை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொண்டு பலவற்றை செய்யலாம்,” என்று திரு சென் விவரித்தார்.

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலத்தில் சுத்தம், சுகாதாரம் போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக ரயில், பேருந்துச் சேவை மீதான நம்பகத்தன்மை, பயண விவரத்தின் துல்லியம் போன்றவற்றை பயணிகள் தற்போது அதிகம் கருத்தில்கொள்வதாக திரு சென் கூறினார்.

கொவிட்-19க்கு பிந்திய உலகில் பயணிகளின் திருப்திக்கான புதிய இயல்புநிலை நிலைப்பட இன்னும் சற்று காலம் எடுக்கும் என்றும் அதற்குப் பிறகே இதுகுறித்து கூடுதலாக முடிவெடுக்கப்படலாம் என்றும் அவர் விளக்கினார்.

விமானப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, நோய்த்தொற்று காரணமாக விமானச் சேவைகளின் எண்ணிக்கை பெரிதளவு குறைக்கப்பட்டிருப்பதால் அவை தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பயணிகளின் திருப்தி நிலையை முந்தைய ஆண்டுடன் ஒப்பிட பொருத்தமாக இருக்காது என திரு சென் குறிப்பிட்டார்.

என்றாலும், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு ஓராண்டிற்குள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள ஆய்வில் பங்கெடுத்த 85.6 விழுக்காட்டினர் விரும்புகின்றனர். விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கிய ஒருமாத காலத்திற்குள் பயணம் செய்ய 39 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கூறுவோரில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்ல விரும்புகின்றனர்.

கொவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து பயணிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளைப் பொறுத்தவரை, சாங்கி விமான நிலையத்திற்கு 10க்கு 8.08 புள்ளிகளை மக்கள் வழங்கியுள்ளனர்.

மாறாக, ரயில் நடத்துநர்களுக்கு 7.06 புள்ளிகள் மட்டுமே கிடைத்தன.

எஸ்எம்யு உன்னத சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் நீதா லட்சுமணதாஸ், இதற்கான காரணத்தை விளக்கினார்.

“இது ஆச்சரியம் தரக்கூடிய ஒன்றல்ல. விமானப் போக்குவரத்துத் துறை இன்னமும் கொவிட்-19க்கு முந்தைய நிலவரத்திற்கு திரும்பவில்லை. அதனால் விமான நிலையங்கள் காலியாக உள்ளன. மாறாக, ரயில்களில் நெரிசல் அதிகரித்துள்ளது.

“தற்போதைய சூழலில் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது கிருமிப் பரவலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த சிந்தனை எழுவது இயல்பே,” என்று அவர் விவரித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon