ஆசியான் நாடுகளுக்கு உதவ புதிய வட்டார மையம்

எதிர்கால வேலைகளுக்கு ஆசியான் நாடுகளைத் தயார்ப்படுத்த புதிய வட்டார மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

வட்டார நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இம்மையம் கைகொடுக்கும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் அறிவித்தார்.

‘தி ரீஜனல் செண்டர் ஃபார் தி ஃபியூச்சர் அஃப் வர்க்’ என்ற இந்த மையம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் சவால்களைச் சமாளிக்கவும் தேவையான கூட்டு முயற்சியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்றார் திருவாட்டி டியோ. குறிப்பாக கொவிட்-19 நெருக்கடி காலத்தில் இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் சுட்டினார்.

புதிய மையம், உலக நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களையும் வட்டார நாடுகளின் முத்தரப்பு பங்காளிகளையும் ஒருசேரக் கொண்டு வரும் என்றார்.

சமூகக் கலந்துரையாடல்கள், தகவல் பகிர்வுகள், திறன் மேம்பாடுகள் போன்றவற்றை இச்சந்திப்புகள் ஊக்குவிக்கும்.

உலகளவிலான ஊழியர் சந்தைகள் கொவிட்-19 நெருக்கடியால் ஆட்டங்கண்டுள்ள நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களில் 93 விழுக்காட்டினரின் வேலையிடங்கள், இவ்வாண்டின் முதல் பாதியில் முழுமையாக மூடப்பட்டன அல்லது பகுதிவாரியாக மூடப்பட்டன என்பதை அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

வீட்டில் இருந்தவாறு வேலை செய்யும் சூழலுக்கு மாற வேண்டிய நெருக்குதலுக்கு வர்த்தகங்கள் ஆளாகின.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மட்டும் இரண்டாம் காலாண்டில் இழந்த பணி நேரம், 235 மில்லியன் முழுநேர வேலைகளுக்குச் சமம் என்று அவர் தெரிவித்தார். குறைந்த ஊதிய வேலை மற்றும் முழுநேரம் அல்லாத வேலையில் இருந்த எளிதில் பாதிப்படையக்கூடிய ஊழியர்களே பெரும்பாதிப்புக்குள்ளாகினர்.

புதிதாக அமைக்கப்பட்ட மையம், மூன்று முக்கிய அம்சங்களில் வட்டார நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் என்று திருவாட்டி டியோ கூறினார். வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, வேலையிடப் பாதுகாப்புக்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுப்பது, புதிய சவால்களை எதிர்கொள்ள நடைமுறைத் தீர்வுகளை உருவாக்குவதில் முத்தரப்பு ஒத்துழைப்பு இருப்பது ஆகியவை அம்மூன்று அம்சங்கள்.

கொள்ளை நோய் சூழலில் இம்மூன்று அம்சங்களும் மேலும் முக்கியத்துவம் பெறுவதாக கூறப்பட்டது.

“புதிய வேலைகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் உருவாக்குவது, செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, தேவைக்கு அதிகமான மனிதவளத்தைச் சமாளிப்பது என எதுவாக இருந்தாலும் அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். நிறுவனமும் ஊழியர்களும் இந்தக் கொள்ளை நோய் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து செழித்திருக்க வேண்டும், குறிப்பாக குறைந்த ஊதியம் பெறுவோரும் நிலையற்ற வேலையில் உள்ளோரும்,” என்றார் திருவாட்டி டியோ.

தொழிலாளர் சந்தைகளின் மீது கொவிட்-19 தாக்கம் குறித்துப் பேசியபோது அவர் சிங்கப்பூரின் ஊழியர்களின் நிலை பற்றி பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 2.8 விழுக்காட்டுக்கு உயர்ந்தது என்று சுட்டிய அவர், பத்தாண்டுகளில் இதுவே ஆக அதிகம் என்றார். இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்புக்கு ஆளானோருக்கு ஆறு மாதங்களில் வேறு வேலை கிடைத்ததும் 58 விழுக்காட்டுக்குச் சரிந்தது என்றார். இதுவரை பதிவான மிகப் பெரிய சரிவு இது என்றார்.

இந்நிலையில் நெருக்கடியைச் சமாளிப்பதில் பொருளியல் மீட்சிக்கும் வேலைகளுக்கான எதிர்காலத்திற்கும் தயாராகும் வாய்ப்புகள் அடங்கியுள்ளதாக அமைச்சர் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!