உலகச் செய்தி நாள்: நல்ல மக்கள் தொடர்பும் நம்பகமான ஊடகமும் முக்கியம்

உலகச் செய்தி நாள்: நல்ல மக்கள் தொடர்பும் நம்பகமான ஊடகமும் முக்கியம்

1 mins read

உலகச் செய்தி நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. உலகத்தின் 150க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்கள், தங்களின் பத்திரிகைப் படைப்புகளையும் குழுக் கலந்துரையாடல்களையும் காட்சிப்படுத்தி இத்தினத்தை சிறப்பித்தன.

இதன் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையக் கருத்தரங்கு ஒன்றின் தொடக்கத்தில் பேசினார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியரும் உலக பத்திரிகை ஆசிரியர்கள் குழுவின் தலைவருமான திரு வாரன் ஃபெர்னாண்டஸ். தற்போதைய கொள்ளை நோய் சூழலில் மக்களுக்குத் தகவல் தெரிவிப்பதிலும் பொய்ச் செய்திகளை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்கள் பெரும் பங்காற்றுவதை அவர் கோடிட்டார்.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் ஆங்கிலம்/மலாய்/தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மையாசிரியராகவும் உள்ள அவர், வேகமாக மாறிவரும் உலகில் தகவல்களைப் பெறவும் உண்மை எது, பொய் எது என்று வேறுபடுத்திப் பார்க்கவும் அனைவருக்கும் உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது அனைவரையும் நெருக்கும் கொவிட்-19 சூழலில் இந்த உதவி மிக இன்றியமையாததாகி உள்ளது என்றும் கூறினார்.

மக்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் தற்போதைய நாட்டுநடப்புகள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்திட செய்தி நிறுவனங்களும் தங்களின் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று திரு ஃபெர்னாண்டஸ் வலியுறுத்தினார்.

எனவே, மக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திட நம்பகமான தகவல்கள் தரப்பட வேண்டும் என்று அவர் சொன்னார். இணையக் கருத்தரங்கின்போது இரண்டு குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் செய்தியாளர்கள் கொள்ளை நோயைக் கையாள்வது தொடர்பில் பேசப்பட்டது.