பதின்ம வயதுப் பிள்ளைகளை போதைப்பொருள் புகைப்பதை அனுமதித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு ஏழாண்டு, ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் $10,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நூர் ஃபதிலா அஸ்லான், 28, (படம்) எனப்படும் அப்பெண் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 4ல் வீடு ஒன்றின் அறையை வாடகைக்கு எடுத்து தமது இரு குழந்தைகளுடன் தங்கி இருந்தார். தீர்வை செலுத்தப்படாத கள்ள சிகரெட்டுகளை இந்தோனீசியாவிலிருந்து வாங்கி, இங்கு விற்கத் தொடங்கினார். விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் கடத்துபவராக அவர் மாறினார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இரவு தமது அறையில் ஐஸ் போதைப்பொருளை புகைத்துக்கொண்டிருந்த ஃபதிலா, மூன்று பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் வழங்க முடிவு செய்தார். 18 வயதுக்குக் குறைவானர்கள் என்பதால் பதின்ம வயதுப் பிள்ளைகளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அதன் பிறகு அந்த அறையில் பல நாட்கள் தங்கிய சிறுபிள்ளைகள் அடிக்கடி போதையில் மயங்கிக் கிடந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஐஸ் போதைப் பொருளை புகைக்க விரும்பிய பிள்ளைகளை அவ்வாறு செய்ய அந்தப் பெண் அனுமதித்தாகவும் அவர் கூறினார்.
சம்பவம் நடைபெற்றதற்கு மறுநாள் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி நால்வரையும் கைது செய்தனர்.
21 வயதுக்கு உட்பட்டவர்களை போதைப்பொருள் அனுபவிக்க அனுமதித்த குற்றத்திற்காக தண்டிக்கப்படும் முதலாமவர் இந்தப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.