நிபுணத்துவச் சேவை வழங்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளை எட்டுவதற்காக மின்னிலக்க பொருளியல் ஒப்பந்தங்களை சிங்கப்பூர் மேற்கொண்டு வருகிறது. மேலும் மோசமடைந்துள்ள நிலையற்ற பொருளியலை எதிர்நோக்கியுள்ள துறையின் போட்டித்தன்மையை வலுவாக்க இத்திட்டம் முக்கிய பங்காற்றும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.
மரினா ஒன் பகுதியில் அமைந்துள்ள 'பிடபுள்யூசி'யின் அலுவலகத்திற்கு நேற்று சென்றிருந்த திரு சான், வர்த்தக மையமாக சிங்கப்பூர் திகழ்வதற்கு அதிக வளர்ச்சியுடைய நிபுணத்துவச் சேவைத் துறை ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டார்.
"துறையின் வளர்ச்சியைப் பொறுத்து சிங்கப்பூரின் எதிர்கால வளர்ச்சிப் பாதை அமைந்துள்ளது," என்றார் அவர்.
"நாம் சிறப்பாகச் செய்தால் சிங்கப்பூரர்களுக்கு உள்ளூரில் மட்டுமல்லாமல் வட்டார நாடுகளிலும் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும். நம் ஆற்றலை இவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் தங்களின் உருமாற்றச் செயல்திறனைத் துரிதப்படுத்தும். ஆனால் அதற்கு மேம்பட்ட, துல்லியமான பகுப்பாய்வு தேவை. இந்தப் பயணத்தில் செல்ல நிறுவனங்களுக்கு நம்பகமான பங்காளிகள் தேவை," என்றார் அமைச்சர் சான்.
நிச்சயமற்ற நிலையைச் சமாளிக்கவும் கொவிட்-19 உலகில் தாக்குப்பிடித்து முன்னேறத் தங்களின் வர்த்தக மாதிரிகளை உருமாற்றவும் மேலும் தெளிவான திட்டங்களைப் பல வர்த்தகங்கள் நாடும் என்று கூறினார்.
நிபுணத்துவச் சேவைகளில் நாட்டின் போட்டித்தன்மையை வலுவாக்க அரசாங்கமும் அதன் பங்கை ஆற்றும் என்றார். துறை செழிப்பதற்காக சரியான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் என சுட்டினார்.
அதே நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சருமான திருவாட்டி இந்திராணி ராஜா, நிபுணத்துவச் சேவைகள் பெரும் வளர்ச்சிக்கான ஒரு துறை என்று சொன்னார்.

