$148 மி. கொவிட்-19 ஆதரவு மானியம் வழங்கப்பட்டுள்ளது

2 mins read
afd9b189-bf1d-4817-888f-87c9ecdbf578
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டத்தின் (சிஎஸ்ஜி) வழி 83,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி $148 மில்லியன் மதிப்பிலான உதவி கிடைத்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

மேலும் 'சிஎஸ்ஜி' திட்டம் வழி பலனடைந்தவர்களும் இன்னமும் பலன் பெறுபவர்களும் இரண்டாவது முறையாக மானியத் திட்டத்திற்குத் தகுதிபெற விண்ணப்பிக்கலாம் என்று நேற்று தம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார் அவர். விண்ணப்பங்கள் அக்டோபர் ஒன்று முதல் சமர்ப்பிக்கப்படலாம்.

புதிய நிபந்தனைகளுடன் கொவிட்-19 ஆதரவு மானியம்

இந்நிலையில் திட்டத்திற்குத் தகுதிபெறுவதற்கான நிபந்தனைகளில் மாற்றம் உள்ளன என்றும் நேற்று முதல் அந்த நிபந்தனைகளும் நடப்புக்கு வந்தன என்றும் கூறப்பட்டது.

புதிய நிபந்தனைகளால் வசதி குறைந்தோருக்கே பெருமளவு ஆதரவு வழங்கப்படும்.

அத்துடன் ஒன்றுக்கு மேல் சொத்து வைத்திருக்காதோர் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலையின்றி இருப்பவர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வேலை தேடியதன் தொடர்பில் ஆவணங்கள் இருக்க வேண்டும். அல்லது பயிற்சிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சான்றாக அவை அமைய வேண்டும்.

இந்த மாற்றங்கள் குறித்து சென்ற மாதம் 22ஆம் தேதியன்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிவித்திருந்தது.

இதன் தொடர்பில் திரு மசகோஸ் தம் பதிவிலும் குறிப்பிட்டிருந்தார்.

"கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய பொருளியல் தாக்கத்தால் ஊழியர்கள் தங்களின் வேலைகளை இழந்திருக்கலாம், ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம், சம்பளமில்லா விடுப்பு அல்லது சம்பளம் குறைக்கப்பட்டிருக்கலாம். இவற்றுக்குச் சான்றாக நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ கடிதங்களைப் பெற ஒரு சிலருக்குச் சிரமமாக இருக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று பதிவில் கூறப்பட்டது.

இத்தகைய சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் உதவிக்கு சமூக சேவை அதிகாரிகளை நாடலாம் என்றும் மத்திய சேம நிதி பதிவுகளைக் கொண்டு அதிகாரிகள் சரிபார்த்து மானியத் திட்டத்திற்குத் தகுதிபெற உதவுவர் என்றும் அவர் தெரிவித்தார்.