கொவிட்-19 தடுப்பூசி அனைவருக்கும் நியாயமான, கட்டுப்படியாகக்கூடிய நிலையில், சம அளவில் கிடைக்க ஏதுவாக அனைத்துலக ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உயர்மட்ட கூட்டத்தில் பேசியபோது, திரு ஹெங் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
முன்னரே பதிவு செய்யப்பட்ட காணொளிப் பதிவில் பேசிய திரு ஹெங், கொவிட்-19 தடுப்பூசி தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்க ஐக்கிய நாட்டு நிறுவனம், உலகச் சுகாதார நிறுவனம், அனைத்தலக அமைப்புகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கிறது என்றார்.
"கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து, வர்த்தகங்கள், ஊழியர்கள், இல்லங்கள் ஆகியவற்றுக்கு கொள்ளைநோய் விளைவித்துள்ள பெரும் பாதிப்பைக் குறைக்க ஒவ்வொரு நாடும் அரும்பாடுபட்டு வருகிறது.
"ஒவ்வோர் இடமும் மிகவும் பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவோர் இடமும் இன்னும் பாதுகாப்பாக இல்லை. ஆகவே, நாடுகள் ஒன்று மற்றொன்றுடன் அணுக்கமாகப் பணியாற்றி இந்தக் கொள்ளைநோயை எதிர்த்துப் போரிட வேண்டும். அதுதான் இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒரே வழி," என்றும் நிதி அமைச்சருமான திரு ஹெங் வலியுறுத்தினார்.

