சிறுமியை மானபங்கம் செய்ததுடன் இன்னொரு சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதன் தொடர்பில் முன்னாள் சிங்கப்பூர் ஆயுதப் படை முழுநேரச் சேவையாளருக்கு ஒன்பது ஆண்டு சிறையும் ஏழு பிரம்படிகளும் விதிக்குமாறு அரசாங்க வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முகம்மது அர்ட்லி இரியான்டி முகம்மது சனிப் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓர் எட்டு வயது சிறுமியை மானபங்கம் செய்ததன் தொடர்பில் குற்றவாளி என்று இவ்வாண்டு பிப்ரவரி 27 அன்று நிரூபணமானது. தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதியன்று அதே 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் வேறொரு 10 வயது சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சி செய்ததையும் அர்ட்லி ஒப்புக்கொண்டார்.
கடுமையான குற்றங்களை அர்ட்லி புரிந்துள்ளதாக அரசாங்க வழக்கறிஞர் சுருதி போபண்ணா நேற்று கூறினார். இரண்டு இளம் சிறார்களை அர்ட்லி குறிவைத்திருப்பதையும் அவர் சுட்டினார். இருப்பினும், தமது கட்சிக்காரர் குற்றங்களைப் புரிந்த காலகட்டத்தில் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாக தற்காப்பு வழக்கறிஞர் முகம்மது முஸாமில் கூறி குறைந்தபட்ச தண்டனை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தற்போது $30,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ள அர்ட்லிக்கு இம்மாதம் 27ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

