ராணுவப் பயிற்சியை அதிகரிக்கவிருக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படை

கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக ஏழு வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய சேவையாளர்களுக்கான அடிப்படை ராணுவப் பயிற்சி, மீண்டும் பல பாதுகாப்பான இடை­வெளி நடவடிக்கைகளுடன் மே மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராணுவப் பயிற்சியின் தரம் குறையாமல் இருப்பதோடு கொவிட்-19 நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மதிப்பிட்டு அவை மேம்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சு உறுதி அளித்துள்ளது.

புதிதாக சேர்ந்திருக்கும் அடிப்படை ராணுவப் பயிற்சி வீரர்கள் உறுதிமொழி எடுத்து பதவியேற்கும் விழாவை காண நேற்று தெக்­கோங் தீவில் உள்ள அடிப்­படை ராணு­வப் பயிற்சி மையத்திற்கு மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது வருகை புரிந்தார்.

இந்தக் காலாண்டில் 4,000 புதிய அடிப்படை ராணுவப் பயிற்சி வீரர்கள் தேசிய சேவையைத் தொடங்குகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று 256 வீரர்கள் தேசிய சேவையைத் தொடங்கினர்.

“ராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு அவசியம். கொவிட்-19 சூழலிலும் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு எப்போதும் நாம் தயார்நிலையில் இருக்கவேண்டும்,” என்றார் திரு ஸாக்கி.

முகாம்களில் கிருமிப் பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஆயுதப்படை நடைமுறைப்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையைத் தினமும் இருமுறை பரிசோதிப்பது, மேம்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகள், சிறுசிறு பயிற்சி குழுக்களாகப் பிரிப்பது, பாது­காப்­பான இடை­வெளி நடவடிக்கைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.

“தங்கள் பிள்ளைகள் நன்கு கவனித்துக்கொள்ளப்படுவதோடு அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலில் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது பெற்றோருக்கு மனநிம்மதியைத் தரும்,” என்று கூறிய திரு ஸாக்கி, பயிற்சி நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று பெற்றோருக்கு உறுதியளித்தார்.

பெரிய படைப்பிரிவு அளவில் நடத்தப்படும் பயிற்சிகளையும் அணிவகுப்புகளையும் தவிர்த்து, 16 பேர் அடங்கிய சிறு பிரிவுகளாக பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. நெரிசலைத் தவிர்க்க வீரர்களுக்கான உணவு இடைவேளை நேரம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகத்தில் உள்ள மேசைகளில் பிளாஸ்டிக் தடுப்புகளைக் கொண்டு பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.

“பயிற்சி முறையில் மாற்றம் இருந்தாலும் அதன் தரத்தில் மாற்றம் இல்லை. சிறிய குழுக்களில் பயிற்சி நடத்துவதற்கு அதிக நேரம் எடுக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பிரிவிற்கான SAR-21 துப்பாக்கியைக் கையாளும் பயிற்சி பொதுவாக அரை நாள் ஆகும், ஆனால் புதிய நடைமுறைகளால் இப்போது அது ஒரு முழு நாள் எடுக்கிறது,” என்று அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தின் படைப்பிரிவு தளபதியான முதலாம் வாரண்ட் அதிகாரி ஹார்டியல் சிங், 58, கூறினார்.

“இருப்பினும், இதுபோன்று சிறிய குழுக்களில் பயிற்சி மேற்கொள்வதில் பல நன்மைகள் உள்ளன. பயிற்சியின் தரத்தை நிலைநாட்ட இது உதவுகிறது. பலவீனமான வீரர்களையும் திறன்வாய்ந்த வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்க வழிவகுக்கிறது,” என்றார் அவர்.

ஜூலை மாதம் அடிப்படை ராணுவப் பயிற்சியில் சேர்ந்த துர்கேஷ் முருகா, “கிருமித்தொற்றுக்கு மத்தியிலும் ராணுவப் பயிற்சிகளைத் தொடர்வது அவசியமான ஒன்று. நமது தேசத்தின் முதுகெலும்பாக செயல்படும் வீரர்கள் நிலையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேசிய சேவையை முடித்து வீரர்கள் விடைபெற, புதிய வீரர்களுக்குப் பயிற்றுவிப்பது முக்கியம். சவால் ஏற்படும்போது எனக்கு ஊக்கம் அளித்து ஆதரவு தந்தனர் எனது படை தளபதிகள்,” என்றார் துர்கேஷ்.

சிறு வயதிலிருந்தே ராணுவ வீரர்களைக் கண்டு தாம் வியந்து இருப்பதாகச் சொன்ன அவர், “அவர்களைப்போல் சிறந்த ராணுவ வீரராக வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால குறிக்கோள்,” என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!