இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலை 1.4% கூடியது.
ஜூலை-செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மறுவிற்பனை விலைக் குறியீட்டெண் 133.7ஐ எட்டியது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்தன.
கடந்த மூன்று மாதங்களில் வீவக மறுவிற்பனைச் சந்தை எதிர்பார்ப்பை மிஞ்சிவிட்டதாக ஆரஞ்ச் டீ அண்ட் டை நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனைத் தலைவர் கிறிஸ்டின் சன் கூறினார்.
இப்போதைய மந்தமான பொருளியல் சூழலில், அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்களும் முந்தைய சொத்துச் சந்தைக் கட்டுப்பாடுகளும் மறுவிற்பனை வீட்டு விலை ஏற்றத்தில் முக்கிய பங்காற்றி இருக்கலாம் என்று திருவாட்டி சன் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, வீட்டுக் கடன் வழங்குவதைக் கடுமையாக்கும் வகையில் அடைமானக்கடன் தவணைத்தொகை விகிதத்தை நடைமுறைப்படுத்தியது போன்ற சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளை அவர் சுட்டினார்.
இதன்மூலம் வீடு வாங்குவோர் அதிகப்படியான கடன் வாங்குவதில் இருந்தும் மிகக் குறைந்த விலைக்குத் தங்கள் வீடுகளை விற்பதில் இருந்தும் தடுக்கப்பட்டு இருக்கலாம் என்றார் திருவாட்டி சன்.
"சென்ற காலாண்டில் எதிர்பார்ப்பைக் காட்டிலும் பொது வீடமைப்புச் சந்தையின் செயல்பாடு வலுவாக இருந்தது, சிங்கப்பூரின் மோசமான பொருளியல் நெருக்கடிக்கு இடையில் சொத்துச் சந்தை வீழ்ச்சி கண்டுவிடுமோ என்ற அச்சத்தைத் தணித்துவிட்டது," என்று அவர் சொன்னார்.
கொரோனா பரவலால் தேவைக்கேற்ப கட்டப்படும் புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய அதிக காலம் ஆனதும் மறுவிற்பனை வீட்டு விலை உயரக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் வீடு வாங்க விரும்பிய சிலர் மறுவிற்பனைச் சந்தையை நாடியிருக்கலாம் என்று திருவாட்டி சன் கூறினார்.
இறுதி, விரிவான புள்ளிவிவரங்களை இம்மாதம் 23ஆம் தேதி வீவக வெளியிடும்.

