சாங்கி விமானநிலையக் குழுமத்தின் நிகர லாபம் 36 விழுக்காடு சரிந்துவிட்டதாகவும் கொவிட்-19 கொள்ளைநோயே அதற்குக் காரணம் என்றும் குழுமத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த குழுமத்தின் நிதி ஆண்டில் பங்குதாரர்களுக்குப் போய் சேரவேண்டிய லாபம் $435 ஆகப் பதிவானது. முந்திய நிதி ஆண்டில் அது $677 மில்லியனாக இருந்தது. லாப வீழ்ச்சி 36 விழுக்காடு. இந்த நிதி ஆண்டில் வருவாய் கூடியபோதிலும் லாபம் இறங்கியது. செலவுகள் அதிகரித்ததே அதற்குக் காரணம் என்றது குழுமம். இதற்கு முந்திய நிதி ஆண்டில் $3.04 பில்லியன் வருவாய் கிடைத்தது. இந்த நிதி ஆண்டில் 3 விழுக்காடு அதிகரித்து $3.12 பில்லியனாக அது பதிவானது.
ஆயினும் தேய்மானம் உள்ளிட்ட மொத்த செலவுகள் ஆறு விழுக்காடு அதிகரித்தன. முந்திய நிதி ஆண்டில் $2.12 பில்லியன் செலவான நிலையில் இந்த ஆண்டில் அது $2.25 பில்லியனாக கூடியது.
சாங்கி விமான நிலையம் முனையம் 1ன் விரிவாக்கத் திட்டத்திற்கும் ஜுவல் சாங்கி விமான நிலையத்தைத் திறப்பதற்கும் பெருமளவிலான நடைமுறைச் செலவுகள் செய்யப்பட்டதாக ஆண்டறிக்கை விவரித்தது. வலுவான பயணத் தேவை இருந்ததாலும் ஜுவல் சாங்கி திறக்கப்பட்டதாலும் இந்த நிதி ஆண்டின் (2019/20) முதல் பத்து மாதங்கள் குழுமம் பிரமாதமான செயல்பாட்டைச் சந்தித்ததாகவும் கொவிட்-19 நோய்ப் பரவத் தொடங்கி உலகளவில் பரவல் விரிவடைந்ததன் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் வர்த்தக நிலவரம் மோசமடைய தொடங்கியது.
விமானப் பயணங்கள் அடியோடு முடங்கியதன் காரணமாக அந்தப் பத்து மாத வளர்ச்சி வீணாகிப்போனதாக குழுமத்தின் முன்னாள் தலைவர் லியு மன் லியோங்கும் தலைமை நிர்வாகி லீ சியோவ் ஹியாங்கும் தெரிவித்துள்ளனர்.

