வாழ்க்கையில் குறிக்கோள் இருந்தால் அதை அடையும் வரை முயற்சியைக் கைவிடாது அதை நோக்கி முன்னேற வேண்டும் என்கின்றனர் 'Foodboys' என்ற ஹலால் உணவு விநியோகத் தளத்தை நிறுவியுள்ள இரு நண்பர்கள்.
கிரண் பிரபாகரன், 23, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்.
முகம்மது இப்ராஹிம், 26, பகுதி நேரமாக தனது தந்தையுடன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்துகொண்டிருந்த இவர்களை இணைத்தது, சுயமாக ஒரு வர்த்தகத்தை நடத்தவேண்டும் என்ற ஆசை.
சிங்கப்பூரின் முதல் ஹலால் உணவு விநியோகத் தளமான 'Foodboys' கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கான தயாரிப்பு வேலைகளைப் பல மாதங்களுக்கு முன்பே கிரணும் இப்ராஹிமும் தொடங்கினர்.
ஹேக் சாலை சந்தை மற்றும் உணவு நிலையம், கேலாங் சிராய் சந்தை மற்றும் உணவு நிலையம் உட்பட பிரபலமான ஐந்து இடங்களிலிருக்கும் 40க்கு மேற்பட்ட உணவுக் கடைகளிலிருந்து 100க்கு மேற்பட்ட உணவுவகைகளை இந்தப் புதிய தளம் விநியோகம் செய்கிறது.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மற்ற பிரபலமான உணவு விநியோகத் தளங்களுக்கு மத்தியில் 'Foodboys' தளத்துடைய தனித்துவம் என்ன என்று கிரணிடமும் இப்ராஹிமிடமும் தமிழ் முரசு கேட்டது. இதற்குப் பதிலளித்த அவர்கள், "பொதுவாகப் பெரிய உணவு அங்காடி நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மற்ற உணவு விநியோகத் தளங்கள் அங்கிருந்து உணவை விநியோகம் செய்வதில்லை. வாடிக்கையாளர்கள் அதிகம் இருப்பதால் விநியோக ஓட்டுநர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால் Grab, Foodpanda போன்ற நிறுவனங்கள் அதை அதிகம் செய்வதில்லை. நாங்கள் இதை எங்கள் தளத்தின் சிறப்பு அம்சமாக்கியுள்ளோம். எங்கள் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உணவு அங்காடி நிலையத்தில் உள்ள வெவ்வேறு கடைகளில் விற்கப்படும் உணவுவகைகளை எங்களிடமிருந்து பெற முடியும். அதோடு, இந்தோனீசிய உணவு, இந்திய முஸ்லிம் உணவு, மலாய் உணவு என்று முழுக்க முழுக்க ஹலால் உணவு வகைகளை மையமாகக் கொண்டு
இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளோம்." என்று இப்ராஹிம் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படிப்பை முடித்தபின் குடும்ப சூழ்நிலையால் இப்ராஹிமால் படிப்பைத் தொடர முடியாமல் போனது. பகுதி நேர வேலைகள் பார்த்துக்கொண்டே தனது தந்தை பணி
புரியும் குளிர்பான கடையில் உதவி செய்து வந்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று நெருக்கடிநிலையின்போது உணவு அங்காடி நிலையங்களில் வியாபாரம் சரிவைச் சந்தித்தது. அப்போது இப்ராஹிம் தமது தந்தையின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி தமது வாடிக்கையாளர்களுக்கும் பக்கத்துக் கடைகளின் வாடிக்கையாளர்களுக்கும் உணவை விநியோகம் செய்யத் தொடங்கினார்.
சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு புத்தாக்க சிந்தனையுடன் அவர் செயல்பட்டு வருகிறார். இப்படி தொடங்கிய ஒன்றை விரிவுபடுத்தி தீவு முழுவதும் விநியோகம் செய்யும் ஓர் அதிகாரபூர்வத் தளமாக கிரணும் இப்ராஹிமும் மாற்றியுள்ளனர்.
விநியோக ஓட்டுநர்களை நிர்வகிப்பது, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது போன்ற வேலைகளை இப்ராஹிம் செய்து
வருகிறார்.
வியாபார நிர்வாகத்தை வழி
நடத்தி வரும் கிரண், இந்தத் தளத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்திகளையும் வர்த்தகத்தின் கணக்கு வழக்குகளையும் கவனித்து வருகிறார்.
முழுநேர பல்கலைக்கழக மாணவரான கிரண், நிதி ஆலோசகராகவும் மருத்துவத் தொழில்நுட்ப வர்த்தக நிர்வாகியாகவும் தற்போது உருவெடுத்திருக்கிறார். கிரணுக்கு சிறுவயதிலிருந்தே சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. தமது கனவை நனவாக்க பதின்ம வயதிலிருந்தே பல பகுதி நேர வேலைகளைச் செய்து பணத்தைச் சேமித்துவந்தார்.
"அலுவலகத்தில் வேலை செய்ய
எனக்கு விருப்பமில்லை. என்னுடைய புத்தாக்க சிந்தனையைக் கொண்டு எனது சொந்த தொழிலை மேம்படுத்த விரும்புகிறேன்.
16 வயதிலிருந்து பல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வோர் அனுபவமும் வாழ்க்கைக்குத் தேவையான படிக்கற்கள் என்று நம்புகிறேன்" என மனுஉறுதியுடன் கூறினார் கிரண்.
இந்த 'Foodboys' தளத்தை நடத்துவது எளிதான காரியமல்ல என்றும் இது சவால்கள் நிறைந்த ஒன்று என்றும் நண்பர்கள் இருவரும் தெரிவித்தனர்.
இப்போதைக்குத் தங்கள் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை வர்த்தக மேம்பாட்டு திட்டங்களுக்காக அவர்கள் பயன்
படுத்தி வருகின்றனர்.
தங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பும் இந்த இரண்டு இளைஞர்கள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் 'Foodboys' ஹலால் உணவு விநியோகத் தளம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகின்றனர்.

