சமூகத்தில் ஒருவர் உட்பட மேலும் எழுவருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் ஒருவர் உட்பட மேலும் எழுவருக்கு கிருமித்தொற்று

2 mins read
e8405f91-6562-4e61-9d76-39daf3666942
-

சிங்கப்பூரில் மேலும் ஏழுப் பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து, இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,819ஆக உள்ளது.

சமூக அளவில் ஒருவருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஐவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வெளிநாட்டில் இருந்து இங்கு வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. சமூக அளவில் இருவருக்கும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த அறுவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சமூக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் வேலை அனுமதி அட்டைதாரர். மற்றொருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்களில் இருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். கடந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்தனர்.

மற்ற மூவர் இங்கு பணிபுரியும் வேலை அனுமதி அட்டை அல்லது அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். நெதர்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி மற்றும் இம்மாதம் 1ஆம் தேதி இங்கு வந்தனர்.

எஞ்சிய ஒருவர் சார்ந்திருப்போர் அட்டைதாரர். கடந்த மாதம் 22ஆம் தேதி ஜப்பானில் இருந்து அவர் இங்கு வந்தார்.

கிருமி தொற்றிய பத்து பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் கிருமித்தொற்றுப் பரிசோதனை மூலம் அவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டது. எஞ்சிய இருவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

கிருமி தொற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடையாளம் காணப்படுவோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும்.